கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் கலந்து கொண்ட தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று (மார்ச் 30) மாலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தேர்தல் பொதுப் பார்வையாளர் ரேணு ஜெய்பால் உள்ளிட்ட கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியாளருமான ராஜா மணி பேசுகையில் தேர்தல் ஆணையத்தின் நெறிமுறைகளை கடுமையாக கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
“அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் பிற கட்சிகளின் கொள்கை, திட்டங்கள் மற்றும் கடந்த கால செயல்முறையை மட்டுமே தேர்தல் பிரசாரத்தின் போது பேச வேண்டும். மாறாகக் கட்சிகளின் தலைவர் அல்லது வேட்பாளர்களது பொது வாழ்க்கைக்குத் தொடர்பில்லாத தனிப்பட்ட வாழ்க்கை குறித்தவிமர்சனத்தைத் தவிர்க்க வேண்டும். பிரச்சாரத்தின் போது இனம், மதம், சாதி மற்றும் மொழி சார்ந்தவர்கள் இடையே உள்ள கருத்து வேற்றுமைகளைத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், பேசுவதும் கூடாது. மசூதி, தேவாலயம், கோவில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் உள்ள மக்களிடம் தேர்தல் பிரசாரம் செய்வதோ ஓட்டு கேட்கவோ கூடாது.
அனைத்து கட்சியினர் மற்றும் வேட்பாளர்களும் தேர்தல் சட்டப்படி ஊழல் நடவடிக்கைகளாகக் கருதப்படும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தல், வாக்காளர்களை மிரட்டுதல், போலி வாக்களித்தல், வாக்குச் சாவடியில் இருந்து 100 மீட்டருக்குள் நின்றுகொண்டு ஓட்டு சேகரித்தல், வாக்குப் பதிவு முடிவதற்கு 48-மணிநேரம் இருக்கும் கால கட்டத்தில் தேர்தல் கூட்டங்கள் நடத்துதல், வாக்குச் சாவடிகளுக்கு வாக்காளர்களை வாகனத்தில் ஏற்றிச்செல்லுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். எந்தவொரு அரசியல் கட்சியோ, அதன் வேட்பாளர்களோ அல்லது கட்சியின் தொண்டர்களோ மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களின் சொத்துகளில் வ தேர்தல் விளம்பரம் செய்யக்கூடாது என்று பேசினார் தேர்தல் அதிகாரி.
இதெல்லாம் எல்லா மாவட்ட தேர்தல் அலுவலர்களும் செய்யும் வழக்கமான அறிவிப்புதான் என்றாலும் கோவை தொகுதில் மத ரீதியான உணர்வுகள் தூண்டப்படுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது என்ற தகவலின் பேரில் வழிபாட்டுத் தலங்கள் பற்றிய எச்சரிக்கையை கடுமையாக அமல்படுத்தும்படி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார் கலெக்டர் ராஜாமணி.
கோவையில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனும், திமுக கூட்டணியில் சிபிஎம் கட்சியின் நடராஜனும் போட்டியிடுகிறார்கள். இரு சாராரும் கொள்கை ரீதியாக ஒருவரை ஒருவர் எதிர்ப்பவர்கள் என்பதால் தேர்தல் பிரசாரம், ஊர்வலம் ஆகியவற்றில் பதற்றம் ஏற்படலாம் என கண்டறியப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள் தேர்தல் ஆணைய வட்டாரத்தில். இதனால், “பிரசார ஊர்வலம் நடத்தப்பட உள்ள நாள், நேரம், வழித்தடம் மற்றும் ஊர்வலம் எங்குத் தொடங்கி எங்கு முடிவடையும் போன்ற விவரங்களை முன்கூட்டியே அளித்து ஒற்றை சாளர குழுவிடம் அனுமதி பெறவேண்டும். எந்த நிகழ்ச்சியையும் உரிய அனுமதி பெற்ற பின்பே நடத்த வேண்டும். ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது. இதை அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.” என்றும் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளார் தேர்தல் அதிகாரி.
�,”