ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக கோட்டைக்காட்டில் நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக திரும்பப்பெறுவதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர். கோட்டைக்காடு கிராமத்தில் 1991ஆம் ஆண்டு மண்ணெண்ணெய் திட்டம் என்ற பெயரில் ஆழ்துளை எண்ணெய்க் கிணறு தோண்டப்பட்டது. அதிலிருந்து ஒருவிதமான வாயுவும், எண்ணெய்க் கசிவும் வெளியேறி வருவதாகவும், அதனால் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு பலர் உயிரிழந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுக்கோட்டையில் செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. இதை எதிர்த்து நெடுவாசல் மக்கள் கடந்த 16 நாட்களாக கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெடுவாசல் மட்டுமின்றி இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள வானக்கண் கொள்ளை, புல்லான்விடுதி, கருக்காகுறிச்சி போன்ற கிராமங்களில் போராட்டம் நடந்து வருகிறது. அதேபோன்று கோட்டைக்காடு கிராம மக்களும் தங்களது கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் போராட்டத்திற்கு எதிராக 6 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேற்கண்ட கிராமங்களில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் மக்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்து போராட வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என்றும் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். போராடும் மக்கள் அதனை நிராகரித்து போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், 6வது நாளாக கோட்டைக்காட்டில் நடைபெற்று வரும் போராட்டத்தை முடிவிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் கடும் முயற்சியில் ஈடுபட்டது. இதையடுத்து, இன்று கோட்டைக்காட்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் புதுக்கோட்டை சார்-ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக போராட்டக் குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான செந்தில்தாஸை தொடர்புகொண்டு கேட்டோம். “இது கோட்டைக்காடு மக்களின் விருப்பம். நாங்கள் அவர்களை தொடர்ந்து போராடுங்கள் என்று கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை நெடுவாசல் கிராமத்தில் தொடர்ந்து போராட்டம் நடக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை. கோட்டைக்காடு கிராம மக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றபோதிலும் இன்று மாலை பாஜக தலைவர்களை சந்திக்க எங்களோடு வருகிறார்கள். கோட்டைக்காடு மக்களின் பிரதிநிதியாக ஒருவர் எங்களோடு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்கிறார்” என்று கூறினார்.�,