ஜப்பான் நாட்டின் சப்போரா நகரத்தில் நேற்று நடந்த வெடி விபத்தில், அங்கிருந்த உணவகமொன்று தரைமட்டமானது. இதில் 42 பேர் காயமடைந்தனர் என்றும், ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பான் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள தீவான ஹொக்கைடோவின் தலைநகர் சப்போரா. நேற்று (டிசம்பர் 16) இரவு 8.30 மணியளவில் (ஜப்பானிய நேரப்படி) சப்போராவிலுள்ள உணவகமொன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இது அருகிலுள்ள கட்டடங்களுக்கும் பரவியது. அருகிலுள்ள வீடுகள், நிறுவனங்களிலுள்ள கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடிகளும் இந்த விபத்தினால் உடைந்தன. உணவகம் அமைந்த இரண்டு அடுக்கு கட்டடம் மரத்தால் ஆனது என்பதால், இந்த விபத்தினால் அது முழுவதுமாகத் தரைமட்டமானது. இந்த கட்டடத்தில் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனமும் ஒரு மருத்துவமனையும் இயங்கி வந்தன.
இந்த விபத்தில் 42 பேர் காயமடைந்தனர். ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக ஹொக்கைடோ செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இது குறித்து ஜப்பானிய போலீசார் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டனர்.
பெருமளவில் வெடிச் சத்தம் கேட்டதாகவும், சாலைக்கு வந்து பார்த்தபோது இந்த கட்டடத்தில் தீ கொளுந்துவிட்டு எரிந்ததாகவும் அக்கம்பக்கத்தினர் போலீசாரிடம் கூறினர். அந்த கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர்கள் வெடித்ததால், இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
முற்றிலுமாக அழிக்கப்படுவதற்காகச் சேகரிக்கப்பட்ட கேஸ் சிலிண்டர்கள் அந்த கட்டடத்தில் இருந்த ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும், வாட்டர் ஹீட்டரில் ஏற்பட்ட கோளாறினால் அவையனைத்தும் வெடித்து விபத்து ஏற்பட்டதாகவும் ஜப்பான் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கட்டடத்தில் இருந்த வாடகைதாரர்கள் குறைந்த அளவிலேயே தீ விபத்துத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததாகவும், சப்போராவிலுள்ள பல கட்டடங்கள் முழுவதுமாகவோ, பகுதி அளவிலோ மரத்தினால் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் சப்போராவில் நடந்த தீ விபத்தொன்றில் 11 பேர் கொல்லப்பட்டனர்.�,”