ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா மீது புகார் அளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய விசாரணை ஆணையம் சசிகலாவுக்கு அனுமதி அளித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அதனை விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணை ஆணையம் கடந்த நவம்பர் மாதம் முதல் விசாரணை நடத்திவருகிறது. ஆணையத்தின் முன்பு பல்வேறு தரப்பினரும் ஆஜராகி விளக்கமளித்துவருகின்றனர்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 23 அன்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. இந்நிலையில் ஜனவரி 5ஆம் தேதி இது தொடர்பாக விசாரணை ஆணையத்தில் சசிகலாவிற்கு பதிலாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆஜரானார். அவர், விசாரணை ஆணையம் அனுப்பிய சம்மனில் சசிகலா நலனுக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்மனுக்கு உரிய பதில் அளிக்க வேண்டுமென்றால், யார் குற்றச்சாட்டு தெரிவித்தது என்ற விவரத்தைக் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். விசாரணை ஆணையமும் அந்த தகவல்களை தருவதாக ஜனவரி 8ஆம் தேதி தெரிவித்திருந்தது.
விசாரணை ஆணையத்தின் முன்பு ஜனவரி 12 ஆஜரான சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், “ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் சசிகலாவுக்கு எதிராக சாட்சியம் அளிப்போரின் பட்டியலை அளிக்க வேண்டும் என்றும், விசாரணை முடிந்த பிறகு சாட்சிகள் அனைவரிடமும் குறுக்கு விசாரணை செய்யப்பட வேண்டும்” என்றும் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நிராகரித்த விசாரணை ஆணையம் இனிவரும் நாட்களில் வேண்டுமானால் விசாரணைக்கு வருபவர்களைக் குறுக்கு விசாரணை செய்யலாம் என்று கூறியிருந்தது.
இந்நிலையில் இன்று (ஜனவரி 30) ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் , ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை 15 நாட்கள் நிறுத்தி வைப்பதாகவும், விசாரணை ஆணையத்தில் ஆஜரானவர்களிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை செய்ய அனுமதி அளிப்பதாகவும் அறிவித்துள்ளது.
மேலும், மருத்துவர் சிவக்குமார், அரசு மருத்துவர் பாலாஜி, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோரின் விசாரணை முடிவடையாததால் அவர்களைத் தவிர, கடந்த ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி முதல் தற்போது வரை சசிகலா மீது புகார் கூறியவர்களின் பட்டியலை விரைவு தபால் மூலம் பெங்களுரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு விசாரணை ஆணையம் அனுப்பிள்ளது.இனிமேல் விசாரணை நடக்கும்போதும், சசிகலா மீது குற்றம்சாட்டுவோரின் தகவல்களையும் தரத் தயார் என்று விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. ஆணையத்தின் விசாரணை வரும் பிப்ரவரி 12ஆம் தேதி மீண்டும் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
�,”