iகனிஷ்க்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

Published On:

| By Balaji

கனிஷ்க் கோல்ட் நிறுவனத்திற்கு 820 கோடி ரூபாய் கடன் கொடுத்தது தொடர்பான வழக்கு விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய, அமலாக்கப் பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சட்டவிரோதப் பணப் பரிமாற்றச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், கனிஷ்க் கோல்டு நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துக்களை முடக்க அமலாக்கப் பிரிவு உத்தரவிட்டது. ஆனால், தங்கள் வங்கிக்கு 820 கோடி ரூபாய் அளவுக்கு கனிஷ்க் கோல்டு நிறுவனம் கடன் பாக்கி வைத்துள்ளதாகவும், அமலாக்கப் பிரிவு உத்தரவால் இந்த கடன் தொகையை வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியது பாரத ஸ்டேட் வங்கி. அமலாக்கப் பிரிவு உத்தரவை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், மனு குறித்து செப்டம்பர் 3ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி அமலாக்கப் பிரிவுக்கு உத்தரவிட்டார்.

இன்று (செப்டம்பர் 3) மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கப் பிரிவு சார்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

அதில், சொத்து முடக்கத்தை எதிர்த்து சட்ட விரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் உரிய அதிகாரி முன்பு முறையிடாமல் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, “கனிஷ்க் கோல்ட் நிறுவனத்திற்கு கடன் வழங்கும் முன்பு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதா? மொத்தமாக எவ்வளவு கடன் வழங்கப்பட்டது?

எவ்வளவு மதிப்பிலான சொத்துக்கள் உத்தரவாதமாக அளிக்கப்பட்டது?” என வங்கித் தரப்பிடம் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார் நீதிபதி.

வங்கி அதிகாரிகளைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டாம் எனவும், இந்த வழக்கில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது எனவும், இந்த ஊழல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரையும் கைது செய்ய உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்தார்.

இந்த ஊழலில் வங்கி அதிகாரிகளின் தொடர்பு குறித்தும், விசாரணை விவரங்கள் குறித்தும், செப்டம்பர் 17ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய அமலாக்கப் பிரிவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார் நீதிபதி ஆர்.மகாதேவன்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share