குழந்தைகளுக்கு விடுதலை தந்த தீர்ப்பு!
‘கல்வியில் வேண்டும் புரட்சி’ எனும் புத்தகம் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வினோபா பாவேயின் மிக முக்கியமான படைப்பு. கல்வி குறித்த விழிப்புணர்வு ஆரம்பிக்கும் முன்னே, தரப்படும் கல்வியின் தரம் குறித்துப் பேசிய ஞானி அவர். அந்த புத்தகத்தில் அவர் இப்படிக் குறிப்பிட்டிருப்பார்.
“உண்மையான வாழ்க்கை நிலைகளிலிருந்து பிரித்து, துக்கப்பட்டு வகுப்பறைகளில் கற்பிக்கப்படும் கல்வி தனிநபரின் படைப்பாற்றலையும் புதியன கண்டுபிடிக்கும் திறனையும், தன்னையறியும் ஞானத்தையும் அழித்துவிடுகிறது. கட்டாயத்தின் மீது கற்பிக்கப்படும் கல்விக்கு பதிலாக இயற்கையாக தன்னிச்சையாக கற்றல் நடைபெற வேண்டும்.”
இவ்வளவு தெளிவான பார்வையுடன் அவர் ஆதாரக் கல்வியின் இயக்கத்தைத் தோற்றுவித்தார். கல்விச் சிந்தனையின் அடிப்படைகள்கூட நம் சமூகத்தில் இன்னும் பரவலானதாகத் தெரியவில்லை. ஒருபுறம் எந்த தெளிவும் இல்லாமல் முற்றிலும் நவீன கல்வியை எதிர்ப்பது அல்லது நவீனக் கல்வியையே ஆதாரமாக மாற்றி அதை மட்டுமே சார்ந்து நிற்பது என்ற இரண்டு சிந்தனைகளில் மட்டுமே பெரும்பான்மையான சமூகத்தினர் இருக்கிறார்கள்.
நவீன கல்வியில் இருந்துகொண்டே மாற்றத்தை முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் பலர் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் வந்திருக்கிறது உயர் நீதிமன்ற வழக்கொன்றின் மீதான தீர்ப்பு.
இரண்டாம் வகுப்பு வரை, குழந்தைகளுக்கு வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது என்று தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இரண்டாம் வகுப்புவரை வீட்டுப் பாடம் கொடுக்கப்படக் கூடாது. இது தொடர்பான உத்தரவை மத்திய அரசும் பிறப்பிக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்துள்ளது.
உத்தரவிட்டதோடு நில்லாமல், இந்த உத்தரவை அமல்படுத்தாத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிபிஎஸ்இ அமைப்புக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வீட்டுப் பாடங்கள் கொடுப்பதால் குழந்தைகளின் குழந்தைமையும், சுதந்திரச் சிந்தனையும் எவ்வளவு மட்டுப்படுகிறது என்ற வாதம் அறிவியல் ரீதியாக முன்வைக்கப்பட்ட பின்னரே இத்தகைய தீர்ப்பை வழங்கியிருக்கிறது உயர் நீதிமன்றம். வினோபா இருந்திருந்தால் ‘இப்போதான் இதையே கண்டுபிடிக்கிறீங்களா’ என்று நிச்சயம் நினைத்திருப்பார்.
இது மாற்றத்திற்கான முதல் படியல்ல, முதல் படியை நோக்கிய பார்வை மட்டுமே. கல்வியில் நாம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம். வினோபாவின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால்,
“எழுத்தை அறிந்துகொள்ளுவதோ கற்றுக்கொள்வதோ அல்ல, அசலான வாழ்வை எதிர்கொள்ளும் கல்வியே மனிதர்களை உருவாக்குகிறது. புதிய கல்வியின் வேர் என்பது சத்தியத்தையும் அன்பையும் தனி வாழ்விலும் சமூக வாழ்விலும் எல்லா வகையான செயல்பாடுகளிலும் பயன்படுத்துவதில் இருக்கிறது.”
தனி வாழ்வும் சமூக வாழ்வும் நேர்க்கோட்டில் சந்திக்கும் அந்த இடத்தில் புதிய கல்வி உதயமாகும்.
**- நரேஷ்**�,