வந்த பின்னாவது காக்கப்படுவோமா?
“மழைப் பொழிவை இந்த ஆண்டே மறந்துவிடுங்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கடுமையான வெப்பம்தான்.“ இது இந்த வாரம் வெளியான ’நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்” எனும் இதழில் பிரசுரமாகியுள்ள ஆய்வுக் கட்டுரையின் சாரம்.
கடல் இயற்பியில் மற்றும் தொலையுணர்வு ஆய்வகத்தின் (Laboratory for Ocean Physics and Remote Sensing – LOPS)ஆராய்ச்சியாளர் ஃப்லோரியன் (Florian) எழுதிய ஆய்வுக் கட்டுரை அது. எதிர்வரும் 2022 வரையிலான ஐந்து ஆண்டுகள் கடும் வெப்பம் நிலவும் என்று தனது புதிய முறை தொழில்நுட்பத்தின் உதவியால் கண்டுபிடித்திருக்கிறார் ஃப்லோரின்.
புவியின் வெப்பத்தைக் கட்டுப்படுத்துவதில் மிக முக்கியப் பங்கு பூமியின் 70 சதவிகிதத்தை ஆக்கிரமித்துள்ள பெருங்கடல்களுக்கு உண்டு. 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கண்டறியப்பட்ட வெப்பநிலை உயர்வைக் கடலினுள் நிகழ்ந்த ‘உள் மாற்றங்களே’ தவிர்த்ததாகக் கூறுகிறார் அவர். தற்போது மனிதர்களின் செயல்களாலும், நீரோட்டத்தில் கலக்கப்படும் குப்பைகளாலும் பெருங்கடல்கள் தமது தன்மையை இழந்துவருகின்றன. எனவே புவியின் வெப்பத்தைச் சேர்நிலையில் வைத்திருக்கும் செயலைக் கடல்களால் செய்ய முடியவில்லை.
நிலத்தடி நீர் சுழற்சி என்பதுகூட பூமியின் வெப்பநிலைக் கட்டுப்பாட்டு செயல்பாடுதான். பூமியின் உள்வெப்பத்தைக் கடத்துவதில் நிலத்தடி நீருக்கு மிக முக்கியப் பங்கு இருக்கிறது.அதையும் ஏகத்துக்கு உறிஞ்சி எடுத்துவிட்டோம். எனவே இனி பூமியின் உள் வெப்பத்தையும் நேரடியாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
காலம் கடந்ததால், எதிர்வரும் வெப்பமயமாதலின் விளைவை நம்மால் தடுக்க முடியாது. இதுவரை பதிவுசெய்யப்பட்ட தகவல்களின்படி 2016ஆம் ஆண்டுதான் அதிகமான வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வெப்பமயமாதல் என்பது கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்கிவிட்டது. அதன் விளைவுகளை எதிர்வரும் ஐந்து வருடங்களில் சந்திக்கப்போகிறோம் என்று எச்சரிக்கிறார் ஃப்லோரியன்.
இவர் மட்டுமா, எல்லோரும் எச்சரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் மனித குலம் பாடம் கற்றதாகத் தெரியவில்லை.
வந்த பின்னாவது காக்கப்படுவோமா?
**- நரேஷ்**�,