உணவுப் பற்றாக்குறையை நோக்கி…
“இனி பூச்சி புழுக்களே மனிதர்களுக்கான உணவு. வருங்காலத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும். எனவே மனிதர்கள் பூச்சி புழுக்களைத் தங்கள் உணவாக்கிக்கொள்ளப் பழக வேண்டும்” என்று ஐக்கிய நாடுகளின் சபை அறிக்கை வெளியிட்டு ஒரு வருடம் ஆகிறது. இதற்கான காரணமாக அவர்கள் பட்டியலிட்டவை, உயர்ந்துவரும் மக்கள்தொகைக்கு உணவு வழங்கும் அளவிற்கான உணவு உற்பத்தி வருங்காலத்தில் சாத்தியமில்லை. நீர் பற்றாக்குறை, நிலம்வளம் இழத்தல் ஆகிய காரணங்களால் உணவு உற்பத்தியில் நம்மால் முழுமையடைய முடியாது. அதே சமயம், பூச்சி புழுக்களை ஒரு சின்ன அறையினுள்ளே வளர்க்க முடியும். பல கோடி மனிதர்களுக்கு உணவாகக்கூடிய பூச்சி புழுக்களைச் சில சதுர அடிகளுக்குள் உற்பத்தி செய்துவிட முடியும் என்று கூறி, இயற்கையைச் சீரழித்த தங்கள் கரங்களைக் கழுவிக்கொள்ள முயன்றன வளர்ந்த நாடுகள்.
இந்த அறிக்கை வெளியிடப்பட்டபோது இதெல்லாம் அதீதக் கற்பனை என்று சிலர் எண்ணியிருக்கக்கூடும். ஆனால், அதுதான் உண்மை என்று நிரூபிப்பதற்கான சான்றுகளுடன் வெளியாகியிருக்கின்றன சமீபத்திய ஆய்வுகள். 1975இலிருந்து 2016 வரை நீண்டகாலத்துக்கு வேளாண் உற்பத்தியை முன்வைத்து நிகழ்த்தப்பட்ட 174 ஆய்வுகள், 40 நாடுகளில் நடத்தப்பட்ட 1,540 சோதனைகள் ஆகியவற்றை ஆராய்ந்து வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள் இவை.
“நிகழ்ந்துகொண்டிருக்கும் சுற்றுச்சூழல் சீரழிவுகள் தொடர்ந்தால், 2050க்குள் உலகக் காய்கறி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிடும். சுற்றுச்சூழலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களான புவி வெப்பமயமாதல், பருவ சுழற்சி மாறுபாடு, தண்ணீர்ப் பற்றாக்குறை போன்ற காரணங்களால் உலக வேளாண் உற்பத்தி பெரும் சவாலாக உள்ளது. 2050க்குள் காய்கறிகள் உற்பத்தியில் சராசரியாக 35 சதவிகிதமும் பயிறு வகை உற்பத்தியில் சராசரியாக 9 சதவிகிதமும் குறையும் வாய்ப்புகள் இருக்கின்றன” என்கின்றன ஆய்வறிக்கைகள்.
இனியும் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பாவிட்டால், மனித இனம் புவியில் நிலைப்பது கடினம்.
**- நரேஷ்**
�,”