ஜூலை – செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிகளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தகவல் தொழில்நுட்பத் துறையில் சமீப காலமாகவே தானியங்கிமயத்தால் வேலைவாய்ப்புகள் குறைந்து பணிநீக்க நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. சில நிறுவனங்கள் தங்களது செலவுகளைக் குறைக்கும் வகையில் திறன் அடிப்படையில் ஊழியர்கள் சிலரைப் பணிநீக்கம் செய்து வருகின்றன. இதுபோன்ற போக்கு தொடரும் சூழலில் சென்ற காலாண்டில் இந்தியாவின் மிகப் பெரிய மூன்று தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டாடா கன்சல்டன்ஸி சர்வைசஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்கள் ஜூலை – செப்டம்பர் காலாண்டில் அதிகப் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளன. இந்நிறுவனங்கள் முந்தைய 12 காலாண்டுகளை விட செப்டம்பர் காலாண்டில்தான் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன.
மேற்கூறிய மூன்று நிறுவனங்களுடன் காக்னிசென்ட் நிறுவனத்தையும் சேர்த்து மொத்தம் 34,048 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் வழங்கப்பட்ட வேலைவாய்ப்பை (6,435 பேர்) விட இது ஐந்து மடங்கு கூடுதலாகும். சொல்லப்போனால் 2017 செப்டம்பர் காலாண்டில் இன்ஃபோசிஸ் மற்றும் காக்னிசென்ட் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு உருவாக்கம் சரிவையே சந்தித்திருந்தது. இந்த ஆண்டின் ஜூலை – செப்டம்பர் காலாண்டுக்கு முன்னர் கடைசியாக 2015ஆம் ஆண்டின் ஜூலை – செப்டம்பர் காலாண்டில் இந்த நான்கு நிறுவனங்களும் இணைந்து மொத்தம் 27,045 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியிருந்தன. இந்த விவரங்களை *பிசினஸ் லைன்* ஊடகம் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.�,