Iஇலங்கைக்கு ஐநா அமைதிப் படை?

Published On:

| By Balaji

இலங்கையின் அசாதாரண அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையை அனுப்ப வேண்டும் என்று பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரனில் விக்கிரமசிங்கே முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக மகிந்த ராஜபக்ஷே ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்ட வலியுறுத்தி ரனில் ஆதரவாளர்கள் லட்சக்கணக்கானோர் தலைநகர் கொழும்பை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் பேசிய ரனில் விக்கிரமசிங்கே, நாட்டின் ஜனநாயகத்தை நிலை நிறுத்தும் உயரிய நிறுவனம்தான் நாடாளுமன்றம்.

நாடாளுமன்றத்தின் இத்தகைய உயரிய அதிகாரத்தை பாதுகாக்கவே தற்போது போராடுகின்றோம். இதை தகர்த்து ஜனாதிபதி நாடாளுமன்றத்தை ஒதுக்கி வைத்துவிட்டு சர்வாதிகாரியாக செயல்படுகிறார். இதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம். நாடாளுமன்றத்தைக் கூட்டி தீர்வு காணும் வரை நமது போராட்டம் தொடரும் என்றார்.

**ஐநா அமைதிப் படை**

இதனிடையே இலங்கைக்கு ஐநா அமைதிப் படையை அனுப்பி வைக்கும் முயற்சிகளில் ரனில் விக்கிரமசிங்கே ஈடுபட்டுள்ளதாக வெளியான தகவல்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளன.

கொழும்பில் நேற்று (அக்டோபர் 30) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மகிந்த ராஜபக்ஷே ஆதரவாளர் வாசுதேவ நாணயக்கார, ஐ.நா. அமைதிப் படை இலங்கைக்கு வர வேண்டும் என ரனில் விக்கிரமசிங்கே கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை ராணுவத்தை அமைதிப் படை வீழ்த்திவிட்டுதான் மகிந்த அரசை அகற்ற முடியும் என்றார். இதே செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டளஸ் அழகப்பெரும, தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதி போரின்போது இலங்கைக்கு ஐநா அமைதிப்படை அழைக்கப்படவில்லை. தற்போது ஐநா அமைதிப்படையை ரனில் விக்கிரமசிங்கே கோரியிருப்பது தேசத்துரோகம் என சாடினார்.

**சிறிசேனா, மகிந்தவை கைது செய்ய வேண்டும்**

இந்நிலையில் மைத்திரிபால சிறிசேனாவும் மகிந்த ராஜபக்ஷேவும் அரசியல் அமைப்புக்கு எதிராக செயல்படுவதால் இருவரையும் கைது செய்து சிறையில் தள்ள வேண்டும் என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன வலியுறுத்தியுள்ளார். மேலும், ரனிலின் ஐக்கிய தேசிய கட்சியுடன் நாங்கள் இணைந்து நிற்க காரணமே ஜனநாயகத்தைப் பாதுகாக்கவே. அதனால் சட்டவிரோத அரசாங்கத்தை பொதுமக்களே ஒன்று திரண்டு கவிழ்க்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share