விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டிக்கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி காலேயில் நேற்று (ஜூலை 26) தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆனால் மழை குறுக்கிடவே, ஆட்டம் சற்று தாமதமாக தொடங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபினவ் முகுந்த், ஷிகர் தவான் ஜோடி களமிறங்கியது. முகுந்த் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், அடுத்து களமிறங்கிய புஜாரா, தவானுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடியை பிரிக்க இலங்கை பந்து வீச்சாளர்கள் சிரமப்பட்டனர். முதலில், ஷிகர் தவான் பவுண்டரிகளாக விளாசி சதம் அடித்தார். இரட்டை சதம் எடுப்பார் என எதிர்பார்த்த நிலையில், ஷிகர் தவான் 168 பந்துகளில் 31 பவுண்டரியுடன் 190 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 280 ஆக இருந்தது. டெஸ்ட் போட்டியில் ஷிகர் தவானின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஷிகர் தவான் – புஜாரா ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 253 ரன்கள் சேர்த்தது.
ஷிகர் தவானைத் தொடர்ந்து விராட் கோலி களமிறங்கினார். ஆனால், அவர் 3 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இதைத் தொடர்ந்து சிதேஷ்வர் புஜாராவுடன் ஜோடி சேர்ந்த அஜிங்யா ரஹானே விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டார். இதனால் அணியின் ரன் வேகம் அதிகரிக்க தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. சிதேஷ்வர் புஜாரா 144 ரன்களிலும், ரஹானே 39 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இலங்கை சார்பில் நுவான் பிரதீப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
நாளைய ஆட்டத்தில் புஜாரா இரட்டை சதம் அடித்து இந்தியா முதல் இன்னிங்ஸில் வலுவான நிலையை நோக்கி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.�,