iஇந்தியா – ஆஸ்திரேலியா தொழில் ஒப்பந்தம்!

Published On:

| By Balaji

ஆஸ்திரேலியா சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வேலைவாய்ப்பு மேம்பாடுகள் உள்ளிட்ட 5 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அரசுமுறைப் பயணமாக நவம்பர் 21ஆம் தேதி ஆஸ்திரேலியா சென்றார். கடந்த இரண்டு நாட்களாக அரசு நிகழ்ச்சிகள், இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகள் எனத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறார். ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸனுடன் இணைந்து சிட்னி அருகே உள்ள பரமாட்டாவின் ஜூப்ளி பூங்காவில் வைக்கப்பட்ட காந்தி சிலையை ராம்நாத் கோவிந்த் நவம்பர் 22ஆம் தேதி திறந்து வைத்தார்.

ஆஸ்திரேலிய நிதியியல் மதிப்பாய்வு இந்திய தொழில் மாநாடு மற்றும் ஆஸ்திரேலியா – இந்தியா பிசினஸ் கவுன்சில் இரவு நிகழ்ச்சி ஆகிய இரண்டு முக்கியமான உரைகளையும் இந்தப் பயணத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிகழ்த்தியுள்ளார். மேலும், 5 ஒப்பந்தங்களும் இவருடைய பயணத்தின்போது கையெழுத்தாகியுள்ளன. குறைபாடுடைய பகுதிகள் மற்றும் சேவைகள் விநியோகம் போன்றவற்றில் இரு தரப்பும் இணைந்து செயல்படும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இதில், இந்தியாவின் ராஞ்சியில் உள்ள மத்திய சுரங்க திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிறுவனம் மற்றும் ஆஸ்திரேலியாவின் கான்ஃபெராவில் உள்ள காமன்வெல்த் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி அமைப்பு இடையே அறிவியல் ஒத்துழைப்பு மற்றும் கண்டுபிடிப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. குண்டூரில் உள்ள ஆச்சார்யா என்.ஜி.ரங்கா வேளாண் பல்கலைக் கழகம் மற்றும் யுனிவெர்சிட்டி ஆஃப் வெஸ்ட்டெர்ன் ஆஸ்திரேலியா இடையே வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வி ஒத்துழைப்பு நடவடிக்கைகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. டெல்லியில் உள்ள இந்திரப்ரஸ்தா தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் பிரிஸ்பேனில் உள்ள குயின்ஸ்லேண்ட் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்துக்கிடையே முனைவர் பட்டத்துக்கான கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதுபோன்ற மேலும் 2 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன. ஆஸ்திரேலிய நிதியியல் இந்திய தொழில் மாநாட்டில் ராம்நாத் கோவிந்த் பேசுகையில், “சுதந்திரமான, வெளிப்படைத்தன்மை கொண்ட மற்றும் சர்வதேச பொருளாதார நிலைகளைக் கடைபிடிக்க வேண்டுமென்று இந்தியா உறுதி பூண்டுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யக் கதவுகள் திறந்தே உள்ளன” என்றார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share