�
அயனாவரத்தைச் சேர்ந்த 11 வயதான மாற்று திறனாளிச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை அயனாவரம் பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதாக, அங்கு வேலை பார்த்து வந்த 17 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட 17 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யுமாறு, சென்னை பெருநகரக் காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். இது தொடர்பான விசாரணை முடிவடைந்த நிலையில், கடந்த செப்டம்பர் 12ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை, அறிவுரைக் கழகம் உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று (அக்டோபர் 23) குற்றம் சாட்டப்பட்ட 17 பேரும் அறிவுரைக் கழகம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். தற்போது, இவர்கள் மீதான குண்டர் சட்டத்தை உறுதி செய்துள்ளது அறிவுரைக் கழகம்.�,