ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்பனை செய்வதற்கான சிறப்பு அமைச்சரவைக் குழுவுக்கு உள் துறை அமைச்சரான அமித் ஷா தலைமைப் பொறுப்பை ஏற்கிறார்.
பொதுத் துறை விமானப் போக்குவரத்துச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா, நீண்ட காலமாகவே கடுமையான நிதி நெருக்கடியாலும் கடன் சுமையாலும் தவித்து வருகிறது. ஏர் இந்தியாவின் பங்குகள் மற்றும் சொத்துகளை விற்பனை செய்து நிதி திரட்டும் முயற்சிகள் தோல்வியடைந்து வருவதோடு, நிதி நெருக்கடி காரணமாக ஏர் இந்தியா ஊழியர்களின் சம்பளமும் தாமதிக்கப்பட்டு வருகிறது. ஏர் இந்தியாவை வருவாய் ஈட்டும் நிறுவனமாக மேம்படுத்தவும், அதன் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ளவும் 2017ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் சிறப்பு அமைச்சரவைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
‘ஏர் இந்தியாவின் குறிப்பிட்ட மாற்று வழிமுறை’ என்று பெயரிடப்பட்ட இந்த அமைச்சரவைக் குழுவின் தலைவராக முன்னாள் நிதியமைச்சரான அருண் ஜேட்லி இருந்தார். விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு, ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, மின்சாரம் மற்றும் நிலக்கரித் துறை அமைச்சர் பியூஷ் கோயல், சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகிய நான்கு பேரும் இக்குழுவின் உறுப்பினர்களாக இருந்தனர். 2019 மக்களவைப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மோடி அரசு மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இந்த அமைச்சரவைக் குழு மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. நிதின் கட்கரி இக்குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தற்போது இந்தச் சிறப்பு அமைச்சரவைக் குழுவில் நான்கு உறுப்பினர்கள் மட்டும் இருக்கின்றனர். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அடங்கிய இக்குழுவுக்கு மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டில் ஏர் இந்தியாவின் 76 சதவிகிதப் பங்குகளை விற்பனை செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில், மீண்டும் ஏர் இந்தியா விற்பனைக்கான முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. ஏர் இந்தியாவை விற்பனை செய்வதற்கான பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தனது 2019-20 பட்ஜெட் உரையில் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
**
மேலும் படிக்க
**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**
**[அத்திவரதர்: வரிச்சியூர் செல்வத்துக்கு பாஸ் கொடுத்தது யார்?](https://minnambalam.com/k/2019/07/18/54)**
**[மாசெக்களுக்கு தெரியாமல் உதயநிதி நடத்தும் புது ஆபரேஷன்!](https://minnambalam.com/k/2019/07/18/45)**
**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**
�,”