Iஅதிக ஊதியம் வழங்கும் நகரம்!

Published On:

| By Balaji

அதிக ஊதியம் வழங்கப்படும் இந்திய நகரங்களில் பெங்களூரு முதலிடத்தைப் பிடித்துள்ளது.

வன்பொருள் & நெட்வொர்க்கிங், மென்பொருள் & தகவல் தொழில்நுட்பச் சேவைகள், நுகர்வோர் துறைகள் ஆகிய 3 முன்னணித் துறைகளில்தான் இந்தியாவில் அதிக ஊதியம் வழங்கப்படுவதாக *லிங்க்டு-இன்* ஆய்வறிக்கை கூறுகிறது. இந்தியாவில் வழங்கப்படும் ஊதியம் குறித்த ஆய்வை இந்த நிறுவனம் முதன்முதலாக நடத்தியுள்ளது. இந்த ஆய்வின் அடிப்படையில் இந்தியாவில் அதிக ஊதியம் வழங்கும் நகரமாகப் பெங்களூரு உள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த ஆய்வில், ’இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூருவில் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக ஊதியத்தை வழங்குவதால் பெங்களூரு இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்கள் அதற்கடுத்தடுத்த இடங்களில் உள்ளன. வன்பொருள் & நெட்வொர்க்கிங் வேலைகளுக்கு ஆண்டுக்குச் சராசரியாக ரூ.15 லட்சம் ஊதியமாக வழங்கப்படுகிறது. மென்பொருள் பணிகளுக்கு ஆண்டுக்குச் சராசரியாக ரூ.12 லட்சமும், நுகர்வோர் பணிகளுக்கு ரூ.9 லட்சமும் வழங்கப்படுகிறது.

நகரங்களின் அடிப்படையில் பார்த்தால் அதிகபட்சமாக பெங்களூருவில் ஆண்டுக்குச் சராசரியாக 11,67,337 ரூபாயும், மும்பையில் 9,03,929 ரூபாயும், தேசியத் தலைநகர் பகுதியில் 8,99,486 ரூபாயும், ஹைதராபாத்தில் 8,45,574 ரூபாயும், சென்னையில் 6,30,920 ரூபாயும் வழங்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது. மிகக் குறைவான ஊதியம் வழங்கும் துறைகளாக இந்தப் பட்டியலில் இறுதி நான்கு இடங்களில் முறையே கட்டுமானம், உற்பத்தி, ரியல் எஸ்டேட் மற்றும் ஊடகம் & தொடர்புகள் துறைகள் உள்ளன.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share