விக்கிரவாண்டி: திமுகவுக்கு சிறுத்தைகளின் பதில் மரியாதை!

Published On:

| By Balaji

விக்கிரவாண்டி தொகுதிக்காக அறிவிக்கப்பட்ட திமுகவின் பொறுப்பாளர்கள் தொகுதிக்கு விரைந்துகொண்டிருக்கும் நிலையில், வேட்பாளர் புகழேந்தி கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராக நேரில் சென்று பார்த்து வருகிறார்.

அந்த வகையில் விக்கிரவாண்டி தொகுதியை உள்ளடக்கிய விழுப்புரம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியின் எம்.பி.யான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ரவிக்குமார், ‘எனக்காக உழைத்த உங்களுக்காக விடுதலைச் சிறுத்தைகள் உழைத்து வெற்றிபெற வைப்போம்’ என்று வேட்பாளர் புகழேந்திக்கு வாக்களித்தார்.

இதுபற்றி விடுதலைச் சிறுத்தைகளிடம் பேசியபோது நெகிழ்வாக பேசினார்கள்.

“கடந்த ஏப்ரல் மாதம் மக்களவைத் தேர்தல் நடந்தபோது விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ராதாமணிக்கு உடல் நலம் குன்றியிருந்தது. அதனால் மாவட்டச் செயலாளர் பொன்முடி மாவட்டப் பொருளாளரான புகழேந்தியிடம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான பொறுப்பை கவனித்துக் கொள்ளுமாறு பணித்தார்.

வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த புகழேந்தி தலித் சமூகத்தைச் சேர்ந்த ரவிக்குமாருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் நெருங்கிய நண்பரான வடிவேல் ராவணனே வேட்பாளராக நின்றபோதும் விக்கிரவாண்டி தொகுதியில் வன்னியர் பிரமுகர்களை எல்லாம் சந்தித்துப் பேசி ஆதரவு திரட்டி அடர்த்தியான வன்னியர் வாக்குகள் ரவிக்குமாருக்கே கிடைப்பதற்கான வேலைகளை தீவிரமாகச் செய்தார். இதனால் சுமார் எட்டாயிரம் ஓட்டுகளுக்கு மேல் விக்கிரவாண்டியில் அதிக வாக்குகள் பெற்றார் ரவிக்குமார். புகழேந்திக்கும் விக்கிரவாண்டியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் நல்ல புரிந்துணர்வு மக்களவைத் தேர்தலில் ஏற்பட்டிருக்கிறது.

அந்த வகையில் எங்கள் சிறுத்தைகள் வேட்பாளரை எம்.பி. ஆக்க உழைத்த புகழேந்தியை எம்.எல்.ஏ. ஆக்க விடுதலைச் சிறுத்தைகள் கடுமையாக உழைப்பார்கள். புகழேந்திக்கு உரிய பதில் மரியாதையை நாங்கள் செய்வோம்” என்கிறார்கள்.

சமீப கால அரசியலில் வித்தியாசமான ஆரோக்கியமான போக்காக இருக்கிறதல்லவா இது! உள்ளபடியே நடந்தால் ஆரோக்கியமான அரசியல் இன்னும் வலுப்படும்!

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share