அமெரிக்காவின் நியூயார்க், சிகாகோ, ஹூஸ்டன், அட்லாண்டா மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆகிய ஐந்து இந்திய துணைத் தூதரகங்களும் சர்வதேச யோகா 2022 தினத்தைக் குறிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வாஷிங்டன் நினைவுச் சின்னத்தில் இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த யோகா நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
நேற்று நடைபெற்ற இந்நிகழ்வில் அமெரிக்க நிர்வாகம், காங்கிரஸ், தொழில்துறை, தூதரகப் படைகள், ஊடகங்கள் மற்றும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். பல புலம்பெயர் மற்றும் அமெரிக்க அமைப்புகளுடன் இணைந்து தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கௌரவ விருந்தினராக அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை (NSF) இயக்குனர் டாக்டர் பஞ்சநாதன் கலந்து கொண்டார்.
இதுகுறித்து அமெரிக்க இந்திய தூதர் தரண்ஜித் சிங் சந்து கூறுகையில், “யோகா உடல், மனம், ஆன்மீகம் மற்றும் அறிவுசார் நலனை மேம்படுத்தும். யோகா மக்களிடம் உள்ள இணைப்பை வலுப்படுத்துகிறது. இது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோரால் வழிநடத்தப்படும் இந்தியா – அமெரிக்கா இருதரப்பு கூட்டாண்மையின் இணைப்பை ஆழப்படுத்தும் விதத்தில் அமையும். உலகிற்கு இந்தியா அளித்துள்ள மிகப்பெரிய பரிசு யோகா.” என்று தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, ஒரு பொதுவான யோகா நெறிமுறை அமர்வு நடத்தப்பட்டது. இதில் ஆர்வத்துடன் பலர் கலந்து கொண்டனர். சர்வதேச யோகா தினம் 2022க்கு முன்னதாக, அமெரிக்கா முழுவதும் உள்ள தூதரகங்களில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
.