கண்டக்டரை தாக்கிய காவலர்கள்: எஸ்.பி.க்கு நோட்டீஸ்!

Published On:

| By Balaji

டிக்கெட் கேட்ட நடத்துநரை தாக்கிய விவகாரத்தில், நெல்லை மாவட்ட எஸ்.பி.நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குமுளியிலிருந்து நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு நேற்று முன்தினம் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் நடத்துநராக ரமேஷ் பணியிலிருந்துள்ளார். அதே பேருந்தில் கூடங்குளத்திற்குப் பணி நிமித்தமாகச் செல்வதற்காக ஆயுதப்படை காவலர்கள் தமிழரசன், மகேஷ் ஆகியோர் பயணித்துள்ளனர். இருவரிடமும் நடத்துநர் ரமேஷ் பேருந்தில் போலீசார் பயணம் செய்வதற்கான வாரண்ட்டை கேட்டுள்ளார். அதற்கு காவலர்கள் இருவரும் தாங்கள் சீருடையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அப்போது நடத்துநர் தானும் சீருடையில் இருப்பதாகத் தெரிவித்து வாரண்டை கேட்டுள்ளார். இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் காவலர்கள் நடத்துநரைத் தாக்கியுள்ளனர். இதில் அவரது கண் அருகில் காயம் ஏற்பட்டு ரத்தம் ஒழுகும் [வீடியோ](https://minnambalam.com/k/2019/09/30/95/conductor_attack_police_kanyakumari_nellai) காட்சி வெளியானது. இதைப் பார்த்தவர்கள் காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதனைத்தொடர்ந்து, நடத்துநரைத் தாக்கிய இருவரையும் திருநெல்வேலி எஸ்.பி. அருண் சக்தி குமார் கைது செய்ய உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி.தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே இதுகுறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகவே நடத்துநரைத் தாக்கியது குறித்து மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இச்சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி. தூத்துக்குடியில் இருக்கும் மனித உரிமை ஆணையத்தில் வரும் 29ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share