சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து உள்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதிசெய்ய கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு செல்பவர்களிடம் ரூ.500 அபராதமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
சென்னை வியாசர்பாடி புதுநகரை சேர்ந்த அப்துல் ரஹீம் (22) தரமணியில் உள்ள சட்டப்பல்கலைக்கழகத்தில் ஐந்தாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரியில் படித்துகொண்டே பகுதி நேர வேலையும் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் பணி முடிந்து கொடுங்கையூர் எம்.ஆர்.நகர் பகுதியில் தனது வாகனத்தில் ரஹீம் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ரஹீமை தடுத்து நிறுத்தி, முகக்கவசம் அணியும்படி அறிவுறுத்தினர். அப்போது காவல்துறைக்கும் அப்துல் ரஹீமுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அப்துல் ரஹீம் அங்கு பணியிலிருந்த காவலர் உத்திர குமாரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
காவலர் உத்திர குமார் அளித்த புகாரின் அடிப்படையில் அப்துல் ரஹீமை கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, இரவு முழுதும் காவல் நிலையத்தில் வைத்து அவரை நிர்வாணமாக்கி அடித்து உதைத்துக் காயப்படுத்தி கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்துல் ரஹீம் போலீசில் அளித்த புகாரில்,”சம்பவத்தின்போது தான் முகக்கவசம் அணிந்து வந்ததாகவும் எனினும் அபராதம் கட்ட போலீசார் வற்புறுத்தியதாகவும் தனது வேலைஅடையாள அட்டையை காண்பித்தும் விடவில்லை. தன்னை நிர்வாணப்படுத்தி காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். இரவு முழுவதும் காவல் நிலையத்தில் பூட்ஸ் காலால் மார்பில் எட்டி உதைத்து போலீசார் காயப்படுத்தினர். பீரோவில் தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டுள்ளது. இரவு 1 மணியில் இருந்து காலை 11 மணிவரை அடித்து உதைத்தனர் என்றும் தனது முகத்தில் சிறுநீர் கழித்தனர்” என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்ட சென்னை மாநகர ஆணையர், இதில் தொடர்புடைய கொடுங்கையூர் காவலர் உத்தர குமார் மற்றும் ஏட்டுப் பூமிநாதன் ஆகிய இருவரையும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். பின்னர் இருவரும் துறை ரீதியான நடவடிக்கை உட்படுத்தப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் காவல் ஆய்வாளர் நஜீமா,ராஜன் உள்ளிட்டோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டால் மட்டும் போதாது, அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுக் கூறி சென்னை ஓட்டேரியில் உள்ள புளியந்தோப்பு துணை ஆணையர் அலுவலகத்தில் நேற்று மதியம் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது இந்த வழக்கில் ஆய்வாளர் நசீமா, காவலர் உத்திரகுமார், பூமிநாதன், ஹேமநாதன், சத்தியராஜ், ராமலிங்கம், அந்தோணி உட்பட 9 பேர் மீது ஆபாசமாகத் திட்டுதல், ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல், காயப்படுத்துதல் ஆகிய 3 பிரிவின்கீழ் (294(b) 323,324) கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யபட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வெளியான செய்திகளின் அடிப்படையில் மனித உரிமை ஆணைய தலைவர் எஸ்.பாஸ்கரன் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளார். சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உள்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய என்றும் சிசிடிவி பதிவுகளை பாதுகாக்க வேண்டும் என்றும் சென்னை காவல் ஆணையருக்கும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
**-வினிதா**
�,”