tடெட் சான்றிதழ் வாழ்நாள் முழுதும் செல்லும்!

Published On:

| By Balaji

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழின் செல்லுபடித் தன்மையை 7 ஆண்டுகளிலிருந்து ஆயுள்காலம் முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

ஆசிரியர் பணிக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்வதற்கு TET எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில், கடந்த 2011ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு மாநில அரசுகளால் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர் தகுதி தேர்வு மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2 ஆம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். இத்தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.

இதுவரையில் அந்தச் சான்றிதழானது 7 வருடங்கள் வரை மட்டுமே செல்லுபடியாகும் என விதிமுறை அமலில் இருந்தது. சான்றிதழ் காலாவதியானால் மீண்டும் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் தேர்வெழுதி சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம். தற்போது சான்றிதழ் செல்லுபடியாகும் காலம் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து மத்திய கல்வியமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2011ஆம் ஆண்டு முதல் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் இனி ஆயுள் முழுவதும் செல்லும். 7 ஆண்டுகாலம் ஏற்கனவே நிறைவடைந்துள்ள விண்ணப்பதாரர்களின் சான்றிதழை மறு மதிப்பீடு செய்வது, புதிய சான்றிதழ்களை வழங்குவது போன்ற தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாநில, யூனியன் பிரதேச அரசுகள் மேற்கொள்ளும்.

கற்பித்தல் துறையில் பணியாற்ற விரும்பும் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக” தெரிவித்துள்ளார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share