தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு இன்று ஒரே நாளில் மட்டும் 19 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் அடங்கிய செய்திக் குறிப்பைத் தமிழக அரசு இன்று மாலை வெளியிட்டது.
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில், வெளி மாநிலம் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த 29 பேர் என மொத்தம் தமிழகத்தில் 1,458 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 30,152 ஆக அதிகரித்துள்ளது. இதில் இன்று 633 பேர் உட்பட மொத்தம் 16,395 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக இன்று 19 பேர் உட்பட இதுவரை மொத்தம் 251 பேர் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 13,503ஆக உள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1,146 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு, 20,993 ஆக பாதிப்பு அதிகரித்துள்ளது. சென்னையைத் தொடர்ந்து செங்கல்பட்டில் 95 பேருக்கும், திருவள்ளூரில் 79 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 16 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
**-கவிபிரியா**�,