தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாகக் கடந்த சில நாட்களாகக் கேரளா முழுவதும் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக மலப்புரம், ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதோடு, ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
தொடர் மழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரம் பகுதிகளில் இருக்கும் வீடுகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்படுகின்றன. இதனால் மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
மழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் 11 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், இரண்டு ராணுவ குழுவினர், இரண்டு பாதுகாப்பு சேவை படை குழுக்கள் உட்பட மத்திய படை குழுக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு கேரளாவில் வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவுகள் போன்று தற்போதைய சூழ்நிலையும் உள்ளது. கோட்டயத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 12 பேர் மாயமாகி உள்ளதாகவும், 5 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டுகல் அருகே பிலாபள்ளி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 வீடுகள் மண்ணில் புதைந்தன. வீடுகளில் 13 பேர் இருந்திருக்கலாம் என்றும் அனைவரும் மண்ணில் புதைந்திருக்கலாம் என்றும் தற்போது வரை 9 பேர் சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முண்டகயம் பகுதியில் பெய்த கனமழையால் வீடு ஒன்று ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்ட காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலத்தின் தென் பகுதிகளில் வசித்த பலர் நிலச்சரிவு மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக இடம்பெயர்ந்துள்ளனர்.
OMG ????
In Mundakayam , Kottayam #KeralaFloods #Kerala #KeralaRains pic.twitter.com/K5SpMPJITC
— BEN K MATHEW (@BENKMATHEW) October 17, 2021
உலகப் புகழ்பெற்ற சபரிமலை கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டம் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. அப்பகுதியில் பல வீடுகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நீரில் மூழ்கி காட்சியளிக்கின்றன. அதோடு மக்களும் நீந்திக் கொண்டே பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதைக் காணமுடிகிறது.
கொல்லம் – பத்தினம்திட்டா எல்லையில் உள்ள , கல்லடா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதுபோன்று எர்ணாகுளம் மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக முவாட்டுபுழா ஆற்றின் உயர் மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது.
இவ்வாறு கடும் பாதிப்புக்குள்ளான கேரளாவில் இதுவரை 21 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி முதல்வர் பினராயி விஜயனிடம் தொடர்பு கொண்டு கேரளாவின் தற்போதைய நிலைமை குறித்துக் கேட்டறிந்தார். அதுபோன்று கேரள மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்திக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா கேரளாவின் நிலவரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் கேரளாவுக்குத் தேவையான உதவிகளை ஒன்றிய அரசு செய்யும் என தெரிவித்துள்ளார்.
**-பிரியா**
�,”