உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான், குற்றம்சாட்டப்பட்டவரிடம், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணேயே திருமணம் செய்து கொள்கிறாயா என கேள்வி கேட்டோம் என நீதிமன்ற அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மோஹித் சுபாஷ் சவான், சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை இரண்டு நாட்களுக்கு முன்பு விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவின் தலைமையிலான நீதிபதிகள் அமர்வு, பாதிக்கப்பட்ட பெண்ணை நீங்கள் திருமணம் செய்து கொள்ள தயாரா? என கேள்வி கேட்டார். அப்படி திருமணம் செய்து கொள்ள சம்மதித்தால், உங்களுக்கு உதவ முடியும் என கூறினார்.
இந்த சர்ச்சைக்குரிய கேள்விக்கு பல்வேறு தரப்புகளிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. இதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மன்னிப்பு கேட்க வேண்டும் மற்றும் பதவி விலக வேண்டும் என்று 3,500க்கும் மேற்பட்ட பெண் உரிமை ஆர்வலர்கள் கடிதம் எழுதினர்.
மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பிருந்தா காரத்,” தலைமை நீதிபதி தனது வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும். குற்றம் செய்பவர்களிடம் இது தவறான சிந்தனையை உருவாக்கி விடும்” என கூறியிருந்தார்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள உச்ச நீதிமன்ற அலுவலர் ஒருவர், ”உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை வைப்பதும், விமர்சிப்பதும் நியாயமற்றது. இந்த வழக்கில் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில்தான் கேள்வி கேட்கப்பட்டது.
மனுதாரர் அளித்த மனுவில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார், இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அப்போது, குற்றம்சாட்டபட்டவரின் தாய், சிறுமியை தனது மகனுக்கு திருமணம் செய்து வைப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார். மேலும், சிறுமிக்கு 18 வயது ஆனவுடன் திருமணத்தை செய்து வைக்க முடிவு செய்து எழுத்துபூர்வமாக ஒப்பந்தம் போடப்பட்டது.கடந்த 2018, ஜூன் 2ஆம்தேதியே பெண்ணுக்கு 18 வயது நிறைவடைந்தது. ஆனால், தற்போது அந்த பெண்ணை திருமணம் செய்ய குற்றம் சாட்டப்பட்டவர் மறுத்துள்ளார். இதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான மனு விசாரணையில்தான், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதி அமர்வு அந்த கேள்வியை முன்வைத்தனர் என விளக்கம் அளித்துள்ளார்.
**வினிதா**
�,