பிஎம்சி மோசடி: சிகிச்சைக்குப் பணமின்றி முதியவர் மரணம்!

Published On:

| By Balaji

பிஎம்சி வங்கி மோசடியால், அதன் வாடிக்கையாளர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா வங்கி, ஹவுசிங் டெவலப்மெண்ட் மற்றும் இன்பிராஸ்ட்ரக்சர் லிமிடெட் என்ற கட்டுமான நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கியின் விதியை மீறி முறைகேடாகக் கடன் வழங்கியது தெரியவந்தது. இந்த மோசடியைத் தொடர்ந்து இந்த வங்கிக்கு ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்த வங்கியில் பணத்தை டெபாசிட் செய்த வாடிக்கையாளர்கள் ரூ.40,000 மட்டுமே எடுக்க முடியும் என்று அறிவித்தது.

இதன்மூலம் வைப்புத் தொகை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். டெபாசிட் செய்த பணத்தைக் கேட்டுப் போராடி வருகின்றனர்.ரூ.40,000க்கும் மேல் எடுக்க முடியாது என்ற தடைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதற்கிடையில் இந்த வங்கியில் பணத்தை வைப்புத் தொகை வைத்திருந்த முன்னாள் ஜெட் ஏர்வேஸ் ஊழியர் சஞ்ஜீவ் குலாத்தி, பணத்தை எடுக்கமுடியாததால் மன அழுத்தம் ஏற்பட்டு உயிரிழந்தார். இவர் இந்த வங்கியில் ரூ.90 லட்சம் டெபாசிட் செய்திருந்தார்.

இவரைப்போன்று , பஞ்சாபைச் சேர்ந்த ஃபாத்தோமல் என்ற வாடிக்கையாளர் நெஞ்சு வலியால் உயிரிழந்தார். இவரைத் தொடர்ந்து பிஎம்சி வங்கியில் தனது மொத்த சேமிப்பையும் வைத்திருந்த பஞ்சாபை சேர்ந்த மருத்துவர் நிவேதிதா பிஜ்லானி (39), அதிக டோஸ் கொண்ட மாத்திரையை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் இந்த வங்கியில் ரூ.1 கோடி டெபாசிட் செய்துள்ளார்.

இந்தநிலையில் பணம் எடுக்க முடியாததால், சிகிச்சைக்குப் பணம் கட்ட முடியாமல் பஞ்சாபில் முரளிதர் தரா(70) என்பவர் உயிரிழந்துள்ளார். பிஎம்சி வங்கியில் இவர் ரூ.80 லட்சம் டெபாசிட் செய்துள்ளார். இவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என்று ஏற்கனவே மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் கடந்த 15ஆம் தேதி ஹார்தேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ரூ.2.25 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரூ.40,000 மட்டுமே வங்கியில் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு இருந்த நிலையில் அவரது குடும்பத்தினரால் முழுத் தொகையையும் செலுத்த முடியவில்லை.

மருத்துவச் செலவுக்காக எவ்வளவு முயன்றும் அவர்களது குடும்பத்தினரால் பணத்தைத் திரட்ட முடியவில்லை. இதற்கிடையே முரளிதர் தரா உயிரிழந்துள்ளார். பிஎம்சி மோசடியால், அதன் வாடிக்கையாளர்கள் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share