~மதுரை டூ மன் கீ பாத்: நெகிழும் சலூன் கடைக்காரர்!

Published On:

| By Balaji

பிரதமர் மோடி பாராட்டியது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்று மதுரை சலூன் கடைக்காரர் தெரிவித்துள்ளார்.

உலகில் ஒவ்வொரு தந்தையும், தங்களது மகள்களை எப்படியாவது நல்லபடியாகக் கரை சேர்க்க வேண்டும் என்று போராடி பணத்தைச் சேமித்து வருகின்றனர். அந்த வகையில் தனது 14 வயது மகளான நேத்ராவின் எதிர்கால கல்வி செலவுக்காக 5 லட்சம் ரூபாய் சேர்த்து வைத்திருந்தார் மதுரையைச் சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் மோகன்.

இந்த சூழலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, வேலை மற்றும் உணவு இல்லாமல் சிரமப்பட்டு வந்தவர்களுக்காக மகளின் [எதிர்காலத்துக்காகச் சேர்த்து வைத்திருந்த பணத்தைச் செலவு செய்து உதவினார் மோகன்](https://minnambalam.com/public/2020/05/10/58/salon-owner-in-madurai-615-families).

சுமார் 615 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, காய்கறி, சமையல் பொருட்கள் அவற்றை வாங்கி கொடுத்துள்ளார். அப்போது இதுகுறித்து மோகன் கூறுகையில், மேலும் 400 குடும்பங்கள் உதவி கேட்டு வந்ததாகவும், மனைவியின் நகை அல்லது வீட்டு நில பத்திரத்தை வைத்து உதவி செய்ய முடிவெடுத்து இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

அதோடு தன்னுடைய வாடிக்கையாளர்கள் மூலம் மீண்டும் அந்த பணத்தைச் சம்பாதித்து விட முடியும். ஆனால் தற்போது இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

மோகனின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, மோகனின் செயலுக்கும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார். அவர் பேசுகையில், ஊரடங்கு காரணமாக ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள் ஆகியோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வலியைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.இந்த சூழலிலும் சலூன் கடைக்காரர் மோகன் தனது மகளின் கல்விக்காக வைத்திருந்த 5 லட்சம் ரூபாயை ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்காகச் செலவிட்டுள்ளார். அவருக்கு எனது பாராட்டுக்கள் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மோகனின் செயலை நாட்டின் பிரதமரே பாராட்டியது அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரதமரின் பாராட்டு, மேலும் பல உதவிகளைச் செய்யவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளதாக அவரது குடும்பத்தினர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மோகன் கூறுகையில், நான் ஒரு சலூன் கடை வைத்திருக்கும் சாமானியன். என்னுடைய சேவையைக் கவனித்து பிரதமர் பாராட்டியது என்னால் நம்ப முடியவில்லை. தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர். இவ்வளவு பெரிய பாராட்டும் பெருமையும் கிடைக்கும் என்று நான் உதவி செய்தபோது சிறிதுகூட எண்ணிப் பார்க்கவில்லை.

என்னுடைய கடைகளுக்கு வருபவர்கள் எல்லாம் அடித்தட்டு மக்கள்தான்.அவர்கள் ஊரடங்கு காரணமாக வேலைக்குச் செல்ல முடியாமல் சாப்பாட்டிற்கே சிரமப்பட்டனர். இதைக் கவனித்த என் மகள் நேத்ரா, படிப்பிற்காகச் சேமித்து வைத்த பணத்தைக் கொண்டு உதவி செய்ய வேண்டும் என்று கூறினாள். நானும் எனது மனைவியும் தயங்கிய நிலையில், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் அடம் பிடித்தாள்.

எனவே மகளது விருப்பப்படியே கஷ்டப்படுகிற மக்களுக்கு உதவினோம் என்றும் இந்த பாராட்டு எல்லாம் நியாயப்படி என் மகளைத் தான் சேரும் என்றும் கூறியுள்ளார் மோகன்.

இதுபோன்று கஷ்டப்படும் மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் சேவை செய்வதற்காகவே, எனது மகள் ஐஏஎஸ் படித்து கலெக்டர் ஆக விரும்புகிறார் என்று கூறியுள்ளார்.

நேத்ரா கூறுகையில், மிகச் சாதாரணமாகத் தான் அந்த உதவியைச் செய்தோம். ஆனால் அதற்குக் கிடைத்த பாராட்டுகளைப் பார்க்கும்போது வாழ்நாள் முழுவதும் இதுபோன்ற சேவையைச் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. எங்களது சேவை தொடரும். ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பதே எனது லட்சியம் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share