தீவிரவாதம்: ‘டார்க் கிரே’ பட்டியலில் பாகிஸ்தான்!

Published On:

| By Balaji

தீவிரவாதிகளுக்கு எதிராக போதுமான நடவடிக்கை எடுத்தல், பயங்கரவாதிகளுக்கான நிதி வசதிகளை தடுத்தல் போன்றவற்றில் பாகிஸ்தான் திருப்திகரமாகச் செயல்படவில்லை என சர்வதேச தீவிரவாத நிதித் தடுப்பு அமைப்பு ‘டார்க் கிரே’ பட்டியலில் பாகிஸ்தானை சேர்த்துள்ளது.

பணமோசடி, பயங்கரவாத நிதியுதவி மற்றும் பிற தொடர்புடைய அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்கான சட்ட, ஒழுங்குமுறை மற்றும் செயல்பாட்டு நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதை ஊக்குவிப்பதே சர்வதேச தீவிரவாத நிதித் தடுப்பு பணிக்குழுவின்(FATF- Financial Action Task Force) வின் நோக்கங்கள் ஆகும். பாரிஸில் நேற்று தொடங்கிய இக்கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், பங்கேற்கிறார்கள். பாகிஸ்தான் தரப்பில் அந்நாட்டின் பொருளாதார விவகாரத்துறை அமைச்சர் ஹமாத் அசார் 2 நாட்கள் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

பாரிஸில் நேற்று(அக்டோபர் 14) நடைபெற்ற நிதித் தடுப்பு பணிக்குழுவின் (எப்ஏடிஎப்) முழுமையான கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள், போதுமான அளவு செயல்படாததால் பாகிஸ்தான் அனைத்து உறுப்பினர்களால் தனிமைப்படுத்தப்படும் எனக் கூறியுள்ளது.

FATF விதிகளின்படி, ‘கிரே’ மற்றும் ‘பிளாக்’ பட்டியல்களுக்கு இடையில் ஒரு முக்கியமான கட்டம் உள்ளது, இது ‘டார்க் கிரே’ என்று குறிப்பிடப்படுகிறது. ‘டார்க் கிரே’ என்பது ஒரு வலுவான எச்சரிக்கையை வெளியிடுவதாகும். இதனால் சம்பந்தப்பட்ட நாடு மேம்பட ஒரு கடைசி வாய்ப்பு கிடைக்கும். ‘டார்க் கிரே’ என்பது மூன்றாம் கட்டம் வரை எச்சரிக்கப்படுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சொல். இப்போது அந்த எச்சரிக்கை பாகிஸ்தான் மீது பாய்ந்திருக்கிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் பாரிஸை தளமாகக் கொண்ட கண்காணிப்புக் குழுவால் பாகிஸ்தான் ‘கிரே’ பட்டியலில் இடம்பிடித்தது. அதை 2019 அக்டோபருக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கும் திட்டம் நிதித்தடுப்பு குழுவால் வழங்கப்பட்டது. கடந்த ஓராண்டில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக போதுமான நடவடிக்கை எடுத்தல், தீவிரவாத முகாம்களை அழித்தல், தீவிரவாதிகளைக் கைது செய்தல், நிதியுதவியைத் தடுத்தல், அடைக்கலம் கொடுக்காதிருத்தல் போன்ற நடவடிக்கை திருப்திகரமாக இருந்தால், அந்நாட்டை ’கிரே’ பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை தொடங்கப்படும் என நிதித்தடுப்பு பணிக்குழு அறிவித்திருந்தது.

ஆனால், பாகிஸ்தான் அரசு போதுமான வகையில் செயல்படவில்லை. ஆசியா பசிபிக் மண்டலத்துக்கான தீவிரவாத நிதித் தடுப்பு நடவடிக்கை குறித்த அறிக்கை கடந்த வாரம் வெளியானது. இதில், எப்ஏடிஎப் அமைப்பின் வழிகாட்டுதல், அளவீடுகளில் 40க்கு 26 விஷயங்களை மட்டும் பாகிஸ்தான் பின்பற்றுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ‘கிரே’ பட்டியலில் இருந்த பாகிஸ்தானை ‘டார்க் கிரே’ பட்டியலில் இணைத்தது எப்ஏடிஎப் அமைப்பு.

ஏற்கனவே இக்குழுவில் கருப்பு(டார்க்) பட்டியலில், ஈரான் மற்றும் வட கொரியா இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், வரும் அக்டோபர் 18 ஆம் தேதி பாகிஸ்தான் குறித்த தனது முடிவை எப்ஏடிஎப் இறுதி செய்யும் என அறிவித்துள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share