பள்ளியை விட்டு வீட்டுக்குத் திரும்பும் குழந்தைகள் மட்டுமல்லர்; வேலையில் இருந்து களைப்பாக மாலையில் வீடு திரும்பும் பெரியவர்களும் சாப்பிட ஏதாவது இருக்குமா என்று கேட்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த கார பின் வீல்ஸ் உதவும். ‘ஒன் மோர் ப்ளீஸ்’ என கேட்க வைக்கும்.
என்ன தேவை?
மேல் மாவுக்கு…
மைதா – ஒரு கப்
ரவை – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – சிறிதளவு
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
பூரணத்துக்கு…
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு – 4
பச்சைப் பட்டாணி (வேகவைத்தது) – அரை கப்
சீரகம், மிளகாய்தூள் – தலா ஒரு டீஸ்பூன் (அல்லது தேவைக்கேற்ப)
தனியாத்தூள் – 2 டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
மல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும்) – 2 (அல்லது தேவைக்கேற்ப)
உப்பு – தேவையான அளவு
கரைப்பதற்கு…
மைதா மாவு – 2 டேபிள்ஸ்பூன்
சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்
பொரிப்பதற்கு…
எண்ணெய் – தேவையான அளவு
கடைசியில் புரட்ட…
பிரெட் தூள் – ஒரு கப்
எப்படிச் செய்வது?
மேல் மாவுக்குக் கொடுக்கப்பட்டுள்ள மைதா மாவு, உப்பு, ரவையைச் சேர்த்துக் கலந்து, இத்துடன் எண்ணெய் சேர்த்துக் கலந்தால் பிரெட் தூள் போல் வரும். இதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்துக் கெட்டி பூரி மாவு பதத்துக்குப் பிசைந்து ஒரு ஈரத்துணியால் மூடி 20 நிமிடங்கள் வைக்கவும். பூரணத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளவற்றைக் கலந்து மசித்து வைக்கவும்.
கரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரை கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும். மேல் மாவை இரண்டு பாகங்களாகப் பிரித்து உருண்டைகளாக உருட்டவும். ஓர் உருண்டையை பெரிய, மெல்லிய ரொட்டியாகத் தேய்க்கவும். ரொட்டியின் ஓரத்தை சிறிதளவு விட்டுவிட்டு, ரொட்டியில் பாதியளவு பூரணத்தைப் பரப்பி பாய் போல் சுருட்டி, ஓரத்தை தண்ணீர் கொண்டு ஒட்டி, அரை இன்ச் நீள துண்டுகள் போட்டவும். பார்ப்பதற்கு சக்கரம் போல இருக்கும். இவற்றை சிறிது லேசாக அழுத்தி, மைதா கலவையில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். மற்றோர் உருண்டையிலும் இதேபோல் செய்து பரிமாறவும்.