தமிழ்நாட்டில் ஏழைகளுக்கு வீடு கட்ட ரூ.1,125 கோடி கடன் தொகை வழங்குவதற்காக ஆசிய வளர்ச்சி வங்கியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசியா கண்டத்திலுள்ள 67 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 1966ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஆசிய நாடுகளின் வளர்ச்சிக்கு நிதி உதவி அளிப்பதை நோக்கமாகக் கொண்டு இது செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு கட்டுவதற்காக ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.1,125 கோடி கடன் வழங்குகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் ஒன்றிய நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள பொருளாதார விவகாரத் துறையின் கூடுதல் செயலாளர் ரஜத்குமார் மிஸ்ராவும், ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்திய அதிகாரி டேகியோ கொனிஷியும் கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து ஆசிய வளர்ச்சி வங்கி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.54 சதவிகித பங்களிப்புடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முக்கிய மாநிலமாக திகழ்கிறது.
இங்குள்ள 7.2 கோடி மக்களில், 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் நகர்புறங்களில் வசித்து வருகின்றனர். இதனால், கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு இடம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, நகரமயமாதலில் இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும்.
எனவே, தமிழ்நாட்டில் நகர்புறங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு ஒன்பது வெவ்வேறு பகுதிகளில் சுற்றுச்சூழல், பேரிடர் பாதுகாப்புடன் மலிவான விலையில், வீடு கட்டி கொடுக்க தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தது.
இதன்படி, தமிழ்நாட்டில் ஒன்பது இடங்களில் தமிழ்நாடு நகர்ப்புற குடியிருப்பு மேம்பாட்டு வாரியம் மூலமாக வீடுகள் கட்டப்படும். இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள இடங்களில் வசிக்கும் 6,000 குடும்பங்கள் இந்த வீடுகளில் குடியமர்த்தப்படும்.
**-ராஜ்**
.�,