கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், மருத்துவமனையில் 14 நாள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வந்த கால வரம்பு குறைக்கப்பட்டதாகத் தகவல்வெளியாகியுள்ளது.
சீனாவிலிருந்து உலக நாடுகளுக்குப் பரவிய கொரோனா வைரசால் தமிழகத்தில் மட்டும் 28,694 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டுமே 19,826 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,624, திருவள்ளூர் மாவட்டத்தில் 1,191, மற்ற மாவட்டங்களில் 500க்கும் குறைவாகப் பாதிப்பு இருந்து வருகிறது.
இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டு எப்படி உள்ளது, அவர்களுக்கு எந்த மாதிரியான உணவுகள் வழங்கப்படுகிறது என்று தெரிந்து கொள்ள கொரோனா வைரஸ் தொற்று நோயாளி ஒருவரிடம் வீடியோ காலில் பேசினோம்.
அவர் கூறுகையில், “வார்டு சுத்தமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு ஆறு முறை சுத்தம்செய்கிறார்கள். சாப்பாடு தட்டு, கிளாஸ், பெட்ஷீட், டவல் கொடுக்கவில்லை. பத்துரூபாய் மெடிமிக்ஸ் சோப் 1, கோல்கேட் பேஸ்ட், டூத் பிரஷ், சன் ஷில்க் ஷாம்பு 2. இவற்றை மட்டுமே கொடுக்கிறார்கள். ஆனால் வெளியில் விளம்பரம் தான் பெரிதாக உள்ளது. இவர்கள் கொடுப்பது எப்படி 14 நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் என்று கேள்வி எழுப்பினார்.
உணவு பற்றிப் பேசிய அவர், “காலை 6.00 மணிக்கு 200 மில்லி பால், 8.00 மணிக்கு இட்லி அல்லது பொங்கல்,9.00 மணிக்கு சத்துணவு கஞ்சி 300மில்லி, 9.30க்கு இஞ்சி மிளகு எலுமிச்சை சாறு கலந்து கஷாயம், மதியம் சாதம் இரண்டு வகையான பொரியல், இரண்டு வாழைப்பழம், இரண்டு முட்டை, மாலை 4.00 மணிக்கு 100கிராம் கொண்டக் கடலை, இரவில் சாப்பாடு, கோதுமை ரவை, இட்லி ஆகியவை கொடுக்கிறார்கள். என்றாலும் உணவுகள் சாப்பிடும் வகையில் இல்லை என்று புலம்பினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், “சென்னையில் எனது நண்பர் கொரோனா வைரஸ் பாசிட்டிவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரை 14 நாட்கள் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்காமல் ஒரு வாரத்தில் மருத்துவமனையிலிருந்து அனுப்பிவிட்டனர்” என்று அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்தார்.
இதுகுறித்து, சென்னையில் உள்ள மருத்துவ அதிகாரி ஒருவரிடம் விசாரித்தோம், “கொரோனா தொற்றுள்ளவரை 14 நாட்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தி மருத்துவ கண்காணிப்பில் வைத்து சத்தான உணவு கொடுத்து, மருந்துகளைக் கொடுத்து வருவோம். தற்போது சென்னையில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சில இடங்களில் பத்து நாட்கள் அல்லது ஒரு வாரத்தில் வீட்டுக்கு அனுப்பி வீட்டில் தனிமைப் படுத்திக் கொள்ள அறிவுறுத்தி அனுப்பப்படுகிறார்கள்” என்றார். சென்னையில், சமூக தொற்றாகப் பரவி வருவதால் மருத்துவமனையில் 14 நாள் தனிமைப்படுத்தி வந்த காலம் இன்னும் குறையும் என்கிறார்கள் மருத்துவ வட்டாரத்தில்.
**எம்.பி.காசி**�,”