தமிழ்நாட்டில் 300க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தாம்பரம் கிழக்கு பாரத மாதா தெருவில் சென்னை அப்போலோ மருத்துவமனையின் அப்போலோ கிளினிக்கை நேற்று(அக்டோபர் 25) சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,”கொரோனா ஒழிப்பு பணியில் அனைத்து பிரிவினரும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். அதேசமயம், நாம் இன்னும் கொரோனா தொற்றிலிருந்து விடுபடவில்லை என்பது மக்கள் உணர்ந்து கொண்டு, அதற்கேற்றவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு ஆண்டு வரையிலாவது, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா போன்ற வளர்ந்த நாடுகளில் மீண்டும் தொற்று தலைதூக்க ஆரம்பித்துள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் தொற்று தலைதூக்காது என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சல் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், அதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது 300க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசுக்கு மக்களும் ஒத்துழைப்பு கொடுத்து, வீட்டின் அருகில் தண்ணீர் தேங்காமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
டெங்கு காய்ச்சலுக்கு காஞ்சிபுரத்தில் ஒரு மாணவியும், கடலூர் மாவட்டத்தில் ஒரு மாணவனும் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, இவர்கள் இருவரும் வசித்து வந்த பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், நகராட்சி சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று சளி, காய்ச்சல் இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
**-வினிதா**
�,