மகாராஷ்டிராவில் திடீர் திருப்பமாக சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவோடு முன்னாள் பாஜக முதல்வர் பட்னவிஸ் மீண்டும் முதல்வராக இன்று (நவம்பர் 23) காலை எட்டு மணிக்கு பதவியேற்றிருக்கிறார். துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பதவியேற்றிருக்கிறார்.
இது தேசிய அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
நேற்று இரவு வரை தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா கட்சிகளின் கூட்டுக் கூட்டம் மும்பை நேரு அறிவியல் மையத்தில் நடந்தது. . இதில் உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே என சிவசேனா சார்பிலும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் சவான், அகமது படேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் இருந்து நேற்று மாலை ஏழுமணிக்கு வெளியே வந்த சரத்பவார், ‘எங்கள் கூட்டணி சார்பில் சிவசேனா தலைவர் முதல்வராக இருக்க ஒப்புக் கொண்டார். உத்தவ் தாக்கரே முதலமைச்சர் என்பதில் நாங்கள் அனைவரும் ஒருமித்த கருத்துக்களைக் கொண்டுள்ளோம் என்று கூறினார்.
சில விநாடிகள் கழித்து, உத்தவ் தாக்கரே தனது மகன் ஆதித்யாவுடன் வெளியே வந்து, “விவாதங்கள் நேர்மறையானவை, பலனளித்தன.”என்று கூறிவிட்டுச் சென்றார்.பின் வந்த அகமது பட்டேலிடம் சரத்பவார் சொன்னதைப் பற்றிக் கேட்க, ‘அவர் வெளிப்படையாகத்தானே சொன்னார்” என்று சொல்லிவிட்டுப் போனார். மேலும் பேச்சுகள் இன்றும் தொடரும் என்றும் அறிவித்திருந்தார்கள்.
இந்நிலையில் இன்று காலையே பட்னவிஸ் முதல்வராக அவசர அவசரமாக பதவியேற்கும் நிகழ்வு நடந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
முதல்வராக பதவியேற்ற தேவேந்திர பட்னவிஸ், “மக்கள் மீண்டும் என்னையே முதல்வராக தேர்ந்தெடுக்கத்தான் தீர்ப்பு வழங்கினார்கள். ஆனால் சிவசேனா அதை உதறிவிட்டு மற்ற கட்சிகளுடன் பேச்சு நடத்தியது. அதனால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. மகாராஷ்டிராவுக்கு இப்போது தேவை நிலையான அரசுதானே தவிர, கிச்சடி அரசு அல்ல” என்றார்.
துணை முதல்வராகப் பதவியேற்றவரும் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார், “தேர்தல் முடிவுகள் வந்த நாளில் இருந்து எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன் வரவில்லை. இந்நிலையில் மாநிலத்துக்கு நிலையான அரசு தேவை என்பதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவெடுத்தோம்” என்றார்.
நேற்று இரவு வரை காங்கிரஸ், சிவசேனா கட்சிகளோடு பேச்சு நடத்திய சரத்பவாரின் சம்மதத்தோடுதான் இது நடக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பிரதமர் மோடி உடனடியாக பட்னவிஸுக்கும், அஜித் பவாருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
�,”