நாமக்கல் கிரீன் பார்க் பள்ளியில் 4ஆவது நாளாக வருமான வரித் துறை சோதனை இன்று நடைபெற்றது. இந்த சோதனையின் மூலம் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டம் போதுப்பட்டி போஸ்டல் காலனியில் கீரின் பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும் நீட் பயிற்சி மையமும் இயங்கி வருகிறது. அங்குப் பயிலும் மாணவர்களிடம் அளவுக்கு அதிகமாகப் பணம் வசூலித்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த பள்ளிக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவையைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் பல குழுக்களாகப் பிரிந்து பள்ளி, நீட் பயிற்சி மையம், பள்ளியின் தாளாளர் சரவணன் மற்றும் இயக்குநர்கள் வீடுகளில் கடந்த 11 ஆம் தேதி முதல் சோதனை நடத்தி வந்தனர். அப்பள்ளியின், சார்பு நிறுவனங்களான பெருந்துறை கிரீன் கார்டன் மெட்ரிக் பள்ளி, கரூர் ஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, சென்னை கிரீன் பார்க் அகாடமிகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் கிரீன் பார்க் கல்வி நிறுவனங்களின் கணக்கில் காட்டப்படாத 150 கோடி ரூபாய் வருமானம் கண்டறியப்பட்டது. நாமக்கல் கிரீன் பார்க் பள்ளி கலையரங்கத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 30 கோடி ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் 4ஆவது நாளான இன்று (அக்டோபர் 14) காலை 7 மணி முதல் கிரீன் பார்க் கல்வி நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், கிரீன் பார்க் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஆந்திராவிலிருந்து வரவழைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும், அதே போல் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் சிலருக்கும் முறைகேடாகப் பணப் பரிவர்த்தனை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி பினாமிகளின் பெயரில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 10க்கும் மேற்பட்ட பள்ளிகள் வாங்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்பள்ளி மற்றும் நீட் பயிற்சி மையத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். குறைந்தது ரூ.3 லட்சம் முதல் மாணவர்களின் பொருளாதார பின்னணியைத் தெரிந்துகொண்டு ரூ.10 லட்சம் வரை பணம் வசூலிக்கப்பட்டதாகவும், ஆனால் குறைந்த அளவு பணம் வசூலிக்கப்பட்டதாக ரசீது வழங்கியிருப்பதாகவும் வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பள்ளி தாளாளர் சரவணனின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும், இதில் தொடர்புடைய சிலரின் வங்கிக் கணக்குகளை ஆராயவிருப்பதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
நான்கு நாட்களாக நடைபெற்ற சோதனை இன்று நிறைவு பெற்றிருக்கிறது. வருமான வரித் துறை தலைமை அலுவலகத்திலிருந்து முழுமையாக எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது என்பது குறித்தான அறிக்கை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீட் ஆள்மாறாட்டம் புகாரில் பல மாணவர்கள், பெற்றோர்களுடன் கைதாகி வரும் நிலையில் இந்த குற்றச் செயலுக்குப் பின்னால் பல நீட் பயிற்சி மையங்கள் இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது நீட் பயிற்சி மையங்களில் வரி ஏய்ப்பு நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது.
�,”