வரலாறு காணாத அளவுக்கு இந்தியாவில் உயர்ந்த பணவீக்கம்!

Published On:

| By admin

இந்தியாவில் வரலாறு காணாத அளவுக்கு பணவீக்கம் உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பணவீக்கம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், இந்தியாவின் மே மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம் புள்ளி விவரங்களை வெளியிட்டது. அதன்படி இந்தியாவின் வருடாந்திர மொத்த விலை பணவீக்கம் மே மாதத்தில் 15.88 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதத்தில் சில்லறை பணவீக்கம் சற்று குறைந்திருந்தாலும், மொத்த விலை பணவீக்கம் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்தியாவில் மொத்த விலை பணவீக்கம் கடந்த 14 மாதங்களாக தொடர்ந்து 10 சதவீதத்திற்கும் மேல் வளர்ச்சி பெற்று வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் பொருட்களின் விலைகள் அதிகரித்ததால், பல நாடுகளில் பணவீக்கம் உயர்ந்தது. மேலும் பல நாடுகளில் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தியாவில் கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்வு காரணமாக மே மாதம் பணவீக்கம் உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவில் மொத்த விலைப் பணவீக்கம் 12.96 சதவீதமாக இருந்தது, பின்னர் பிப்ரவரி மாதத்தில் 13.11 சதவீதமாகவும், மார்ச் மாதத்தில் 14.55 சதவீதமாகவும், ஏப்ரல் மாதத்தில் 15.08 சதவீதமாகவும் உயர்ந்தது. தற்போது மே மாதத்தில் 15.88 சதவீதமாக உயர்ந்துள்ளது. தற்போது பொருளாதாரம் இருக்கும் சூழ்நிலையில் இந்த பணவீக்கம் வரும் மாதங்களில் மேலும் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share