சிறப்புக் கட்டுரை: இந்துத்துவம் – சாவர்க்கர் சொன்னதும் செய்ததும்!

public

h4>எஸ்.வி.ராஜதுரை

அந்தமானிலிருந்து கொண்டுவரப்பட்டு இரத்தினகிரி, ஏரவாடா சிறையில் வைக்கப்பட்டுப் பின்னர் பிரிட்டிஷார் விதித்த நிபந்தனைகளுடன் வெளியே வந்த சாவர்க்கர், 1923இல் வெளியிட்ட நூல்தான் ‘இந்துத்துவா அல்லது இந்துக்கள் யார்? (Hindutva or Who is a Hindu). 1912-13ஆம் ஆண்டுகளில் அந்தமான் சிறையிலிருக்கும் போது அவரால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் அந்த நூலைப் பற்றி பலவிதமான கதைகள் சொல்லப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, அந்தமான் சிறையில் அவர் வைக்கப்பட்டிருந்த ‘செல்’லின் சுவர்களில் அந்த நூலை எழுதிக்கொண்டிருந்தார் என்றும், அதிலுள்ளவற்றை மறக்காமலிருக்க அவர் தினந்தோறும் மனப்பாடம் செய்து கொண்டிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. வேதபாராயணங்களைப் படித்து அவற்றை அப்படியே ஒப்புவிக்கும் முறையில் கைதேர்ந்த சாதியைச் சேர்ந்த அவர் அப்படிச் செய்திருந்தாலும் வியப்பொன்றுமில்லை.

**ரோஜாவும் ஹிந்துவும்**

ஷேக்ஸ்பியரின் ‘ ரோமியோ ஜூலியட்’ நாடகத்தில், ஜூலியட் தன் குடும்பத்துக்கும் தன் காதலன் ரோமியோவின் குடும்பத்துக்கும் உள்ள பகையை மனதில் கொண்டு அவன் தன் பெயரை மாற்றிக் கொள்ளலாமே என்று கருதும் ஜூலியட், “பெயரில் என்ன இருக்கிறது? ரோஜா மலரை எந்தப் பெயரில் அழைத்தாலும் அது ரோஜா மலர்தானே” என்று கூறுவதை மேற்கோளிட்டு ’ஹிந்துத்துவா-ஹிந்து யார்?’ என்னும் நூலைத் தொடங்குகிறார் சாவர்க்கர்.

ஓர் இலக்கியச் சுவை நிறைந்த நூலொன்றைப் படிக்கப் போகிறோம் என்று நினைப்பவர்கள், விருப்பு வெறுப்பற்ற எந்த வாசகனையும் நகைப்புக்கோ, வெறுப்புக்கோ தள்ளக்கூடியதுமான ஒரு நூலைத்தான் காண்பார்கள். ‘ரோமியோ ஜூலியட்’ நாடகத்திலுள்ள மேற்சொன்ன வரியை மேற்கோள் காட்டிய பிறகு, சாவர்க்கர் கூறுகிறார். (ஒரு பெயரால் சுட்டப்படுவது) கையோ, காலோ அல்ல, முகமும்கூட அல்ல, ஏன் மனிதனின் எந்தவொரு குறிப்பிட்ட உறுப்பும் அல்ல” – ஜூலியட் இவ்வாறு நினைத்திருக்கலாம். ஆனால் இந்துக்களைப் பொறுத்தவரை பெயர் என்பது மிக முக்கியமானது.

‘இந்து’, ‘இந்தியா’ என்ற பெயர்கள் எப்படி வந்தன என்ற ஆராய்ச்சியில் இறங்கி, புராணங்களையும் கட்டுக்கதைகளையும் துணைக்கழைக்கிறார் சாவர்க்கர். ஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியே இருந்து வந்தவர்களல்லர் என்றும் இந்த நாட்டின் சுதேசிகளே அவர்கள் என்றும், அவர்கள்தாம்

சிந்து சமவெளி நாகரிகத்தை உருவாக்கினார்கள் என்றும் இன்றைய சங் பரிவாரத்தினர்

கூறுவதற்குச் சற்று மாறாக, ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து சிந்து நதிக் கரைப் பகுதிக்கு வந்தனர் என்றும், உலகின் மிகப் பழைமையான நாகரிகங்களிலொன்று எனச் சொல்லப்படும் பாபிலோனிய நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே ஆரிய வேத ரிஷிகளின் யாகப் புகைகள் வானை நோக்கி எழுந்து கொண்டிருந்தன என்றும் சாவர்க்கர் சிலாகிக்கிறார்.

**இந்துயிசம் – இந்துத்துவம்**

வடமேற்கு இந்தியாவிலிருந்து மெல்ல மெல்ல இந்தியாவின் பிற பகுதிகளுக்குச் சென்ற ஆரியர்களோடு சேர்ந்து அவர்களது பண்பாடும் பரவியது என்றும், ஆரியரல்லாத மக்கள் அங்கு இருந்தபோதிலும் அவர்களுக்கும் ஆரியர்களுக்கும் ரத்தக் கலப்பு ஏற்பட்டு இந்து தேசம் உருவாகியது என்றும், இந்து பூர்வீகத்துடன் தொடர்புடையவர்கள் அனைவருடனும் தனக்கு ரத்த உறவு இருக்கிறது என்று கருதுபவனும் வடக்கே சிந்து நதி முதல் தெற்கே இந்து மாக்கடல் வரை உள்ள பகுதியே இந்தியா என்று ஒப்புக் கொள்பவனும்தான் இந்து என்றும் கூறுகிறார். இந்தியாவை ஒரு தெய்விக பூமி அல்லது புனித பூமி என்று கருதுபவனே இந்து ஆவான் என்றும், இந்த இந்துக்கள் யாவரும் ஒரே மரபினம் (race) என்றும் இந்த நூலில் கூறுகிறார் சாவர்க்கர்.

இந்துமதம் அல்லது இந்துயிசம் என்பது ஒரு மதத்தை, அதாவது வேததர்மம், சனாதன தர்மம் என்பதைக் குறிக்கும் என்றும், இந்துத்துவம் என்பதோ இந்திய மண்ணில் தோன்றிய அனைத்து இறையியல், தத்துவக் கோட்பாடுகளையும் தழுவக்கூடிய ஒரு பண்பாடு என்றும் கூறுகிறார். இந்தப் பண்பாட்டை உருவாக்கியவர்களின் பட்டியலில் வேதகால முனிவர்கள், மகாவீரர், புத்தர், குருநானக், பசவண்ணா, சக்ரதாரர், நாகசேனக், திருவள்ளுவர், ராஜாராம் மோகன் ராய், தயானந்த சரஸ்வதி, ராமர், கிருஷ்ணர், மத்வர், சைதன்யர், குரு கோவிந்தர் என்ற பலதரப்பட்டவரைச் சேர்த்துள்ளார் சாவர்க்கர்.

மேலே குறிப்பிட்ட சிந்தனையாளர்கள், ஆன்மிகவாதிகள் பலரது கருத்துகள் சாவர்க்கரின் கருத்துகளுக்கு நேர்முரணானதாக இருந்தது வெளிப்படை. எடுத்துக்காட்டாக, உடன்கட்டை ஏறும் வழக்கத்தைப் பிரிட்டிஷார் ஒழிக்கும்படி செய்தது ராஜாராம் மோகன் ராயின் முயற்சிதான். உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஆங்கிலேயர்கள் தடை செய்ததைக் கடுமையாக எதிர்த்தவர்களிலொருவர் சாவர்க்கர்.

சாவர்க்கர் கூறும் இந்துத்துவத்தில் இந்திய மண்ணில் தோன்றிய அனைத்துச் சமயச் சிந்தனைகளும் – பெளத்தம், சமண, சீக்கியம், நாத்திக முதலியனவும் அடங்கும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். மேலும், ‘இந்து’ என்ற சொல்லுக்கு சாவர்க்கர் கொண்டிருந்த பொருள், பொதுவான சமய, பண்பாட்டு மரபைக் கொண்டிருக்கும் மக்கள் என்பதுதான் என்று அவர் கூறுகின்றார் என்றும், சாவர்க்கர் தனிப்பட்ட முறையில் எந்தவொரு சமய நம்பிக்கையையும் வெளிப்படுத்தியவரல்லர் என்றும் நாத்திகரைக் கூட அவர் இந்துவாகவே கருதினார் என்றும் வாதிடுகின்றனர். ஆனால், சாவர்க்கரின் இந்துத்துவம் ஒரு மதப் பண்பாட்டின் அடிப்படையில்தான் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களையும் ஒரே தேசிய இனமாக வரையறுக்கிறது.

அவர் கூறுகிறார் “சந்தால், கோலி, பில், நாமசூத்திரா மற்றும் பிற அனைத்துப் பழங்குடி மக்களும் இந்துக்கள்தான். ஆரியர்கள் என்று சொல்லப்படுபவர்களின் பூமியாக இந்த பூமி எந்த அளவுக்கு உள்ளதோ, அதைவிட அதிகமாக இல்லாவிட்டாலும், அதே அளவிற்கு இது இந்தப் பழங்குடியினரின் பூமியும் ஆகும். இவர்கள் இந்து ரத்தத்தையும் இந்துப் பண்பாட்டையும் சுவீகரித்துள்ளனர்.”

சாதிக் கட்டமைப்பையும் இந்துமதத்தையும் ஆதரித்த சாவர்க்கர், சாதிப் பாகுபாடுகளையும் இந்து மதத்தையும் கடந்த ஒரு தத்துவமே இந்துத்துவம் என்று கூறுவது விநோதமான கருத்து அல்லவா?

**சாதிகளைப் பின்பற்றும் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் பற்றி சாவர்க்கர்**

இந்துக்களில் சாதிப் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பவர்களும், இந்துப் பண்டிகைகளைக் கொண்டாடுபவர்களுமான முஸ்லிம்களில் ஒரு பிரிவினரும் பெரிதும் குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களில் வாழ்பவர்களுமான கோஜாக்கள் , போஹ்ராக்கள் ஆகியோரின் மீது ’இந்துத்துவா அல்லது இந்து யார்’ என்னும் நூலில் ஓரளவு பாசம் பொழியப்படுவதற்குக் காரணம், அவர்கள் இந்துக்களின் சாதிப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவதும் இந்துப் பண்டிகைகளைக் கொண்டாடுவதும்தான்.

அதேவேளை, சாவர்க்கர் கூறுகிறார், இந்தியாவின் பல பகுதிகளில், கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் இந்துக்களின் சாதியமைப்பைப் பின்பற்றுகிறார்கள், சுயசாதிக்கு அப்பால் திருமணம் செய்து கொள்வதில்லை. எனினும் அவர்களை இந்துக்களுடன் சேர்க்க முடியாது. ஏனெனில் அவர்களுக்கு இந்த நாட்டுடன் பிணைப்பு இல்லை.

பெளத்த, சீக்கியம், சமணம் ஆகிய பார்ப்பன எதிர்ப்பு சமயங்களை இந்துமதத்தின் உட்கூறுகளாகக் கருதும் சாவர்க்கர் இந்த நூலில், அகிம்சையைப் போதித்ததன் மூலம் பெளத்தம் இந்தியாவில் அந்நிய படையெடுப்பாளர்களைத் தடுத்து நிறுத்தத் தவறியது என்று குற்றம் சாட்டுகிறார்.

**சமஸ்கிருதமே தாய்மொழி**

அவர் கூறுகிறார்: ”நமது வரலாறு நமது இனத்தின் செயல்களின் கதையைச் சொல்வது போலவே, நமது இலக்கியம் அதனுடைய முழுமையான பொருளை எடுத்துக்கொண்டால் நமது இனத்தின் சிந்தனையின் கதையைச் சொல்கிறது, சிந்தனை என்பது நமது பொது மொழியான சமஸ்கிருதத்திலிருந்து பிரிக்கமுடியாதது என்று அவர்கள் சொல்கிறார்கள். நிச்சயமாக அதுதான் நமது தாய்மொழி , நம் இனத்தின் தாய்மார்கள் பேசிய மொழி. நமது இன்றைய மொழிகள் அனைத்தையும் பிறப்பித்த மொழி. நமது கடவுள்கள் சமஸ்கிருதத்தில் பேசினார்கள், நமது கவிஞர்கள் சமஸ்கிருதத்தில் எழுதினார்கள். நம்மிடமுள்ள மிகச் சிறப்பானவையெல்லாம் மிகச் சிறந்த சிந்தனைகள், மிகச் சிறந்த கருத்துகள், மிகச் சிறந்த வரிகள் , தம்மியல்பாகவே சமஸ்கிருதம் என்னும் ஆடையை அணிந்து கொள்கின்றன. லட்சக்கணக்கானோருக்கு அது இன்னமும் அவர்களது கடவுள்களின் மொழியாக இருக்கிறது அனைவரையும் பொறுத்தவரை அது எல்லா மொழிகளுக்கும் மேலானவொன்றாகத் திகழ்கின்றது; அது எல்லோருக்கும் பொதுவான பாரம்பரியச் செல்வம், நமது சகோதர மொழிக் குடும்பம் அனைத்தையும் செழுமைப்படுத்துகிற மொழி… அது மொழி மட்டுமல்ல பல இந்துக்களுக்கு அது ஒரு மந்திரம். எல்லோருக்கும் அது ஓர் இசை”.

இந்தியா என்னும் நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்களிடையே உள்ள வேறுபாடுகள் – அவர்கள் அனைவருக்குமே சமஸ்கிருதம்தான் தாய்மொழியாக இருக்கின்ற காரணத்தால் மங்கி விடுகின்றன என்று கூறுவதன் மூலம் இந்தியாவிலுள்ள பல்வேறு தேசிய இனங்களின் தனித்தன்மையை மறுக்கிறார் சாவர்க்கர்.

மேலும், பல்வேறு பகுதிகளில் பேசப்படும் மொழிகளில் ஒரு பொதுவான உள்ளடக்கம் இருப்பதால் “ பிரித்விராஜனின் வீழ்ச்சிக்காக வங்காளம் கண்ணீர் சிந்துகின்றது குருகோவிந்தரின் மகன்கள் இறந்து போனதற்காக மராத்தியம் அழுகின்றது” என்றும்,“ காஷ்மீரிலுள்ள பார்ப்பனர்கள் துன்பப்படுவதற்காக மலபாரிலுள்ள நாயர்கள் அழுகின்றனர்” என்றும் கூறுகிறார். இந்துத்துவப் பண்பாடு என்பது இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவானதாக உள்ளது என்பதை நிறுவுவதற்காக அவர் அசட்டுத்தனமான சில வாதங்களை முன்வைக்கிறார்.

எடுத்துக்காட்டாக, ஒரு வங்காளியிடம் ஹஃபீஸின் படைப்புகளையும் கம்பனின் படைப்புகளையும் காட்டினால், அவன் ‘கம்பன்தான் என்னுடையவன்’ என்று சொல்வானாம். இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்தவனிடம் ஹஃபீஸின் கவிதைகளையும் ரவீந்திரநாத்தின் கவிதைகளையும் காட்டினால் அவர், ‘ரவீந்திரர்தான் என்னுடையவர்’ என்பானாம்!.

**தந்தையர் பூமியும் புண்ணிய பூமியும்**

இந்துத்துவம் என்பதும் இந்துயிசம் என்பதும் ஒன்றல்ல என்றும், ’இசம்’ என்பது பொதுவாக ஆன்மிக, மதக் கோட்பாடுகளையே குறிக்கும் என்றும், இந்துத்துவத்தின் அடிப்படையின் முக்கியத்துவத்தை ஆராயும்போது தமக்குள்ள முதன்மையான அக்கறை மதமோ அதன் கோட்பாடுகளோ அல்ல என்றும் கூறும் சாவர்க்கார் அதே மூச்சில் கீழ்க்கண்டவற்றையும் கூறுகிறார்.

“ஒவ்வொரு இந்துவுக்கும்… இந்துஸ்தான் என்பது ஒரே சமயத்தில் தந்தை நாடாகவும் புண்ணிய பூமியாகவும் உள்ளது. அதனால்தான், ஆதியில் இந்து-அல்லாத மதத்திற்கு மாற்றப்பட்டு பின்னர் இந்துக்களோடு சேர்ந்து பொதுவான தாய்நாட்டையும், மொழி, சட்டம், பழக்கவழக்கங்கள், மரபான நம்பிக்கைகள், வரலாறு ஆகிய அடங்கிய ஒரு பொதுவான கலாச்சாரச் செல்வத்தின் பெரும் பங்கையும் சுவீகரித்தவர்கள் இந்துக்கள் அல்ல, இந்துக்களாக அங்கீகரிக்கப்பட முடியாதவர்களும் ஆவர்.

இந்துக்கள் பலரைப் போலவே ஹிந்துஸ்தான் அவர்களுடைய தந்தையர் நாடாக இருந்தாலும், அவர்களுக்கு அது புண்ணிய பூமியாகவும் இருப்பதில்லை. அவர்களுடைய புனித பூமி அராபியாவில் உள்ளது. இதன் விளைவாக அவர்களுடைய கண்ணோட்டம் அந்நிய மூலாதாரத்தன்மையைக் கொண்டுள்ளது. இந்துத்துவத்தின் அடிப்படைகளான இனம், ரத்தம், கலாச்சாரம், தேசியத்தன்மை ஆகிய எல்லாவற்றையும் கொண்டுள்ளவர்களும், வன்முறையின் மூலம் நமது முன்னோர்களின் இல்லத்திலிருந்து பறித்தெடுக்கப்பட்டவர்களும் நமக்கெல்லோருக்கும் பொதுவான தாயின் மீது இதயம் நிறைந்த அன்பை வழங்கி , அந்த தாய் அவர்களது தந்தை நாடு மட்டுமல்ல, புனித பூமியும் ஆகும் என்பதை ஏற்றுக் கொள்வார்களேயானால், அவர்கள் இந்துக்களின் மடியில் மிகவும் வரவேற்கப்படக்கூடியவர்களாக இருப்பர்.”

ஆக, இந்துத்துவம் என்பது அடிப்படையில் இந்து மதம்தான், இந்து மதம்தான் இந்து தேசம், இந்திய தேசியம் , கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் இந்துக்களாக மதம் மாறினால்தான் அவர்கள் உண்மையான இந்தியர்கள் ஆவார்கள் – இதுதான் சாவர்க்கரின் இந்துத்துவம்.

**பொது அடையாளத்துக்கான திட்டங்கள்**

இந்துத்துவம் வேறு, இந்து மதம் வேறு என்று அவர் கூறினாலும், இந்து மதத்தின் பெயரால்தான் தம் கோரிக்கைகளை எழுப்பினார் என்பதை மராத்திய தலித் அறிஞர் கோபால் குரு, ’எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி’ ஜூலை 6-13 இதழில் எழுதிய ‘Appropriating Ambedkar’ என்னும் கட்டுரையில் விளக்குகிறார். எடுத்துக்காட்டாக, தாழ்த்தப்பட்ட சாதியினரான மஹர்கள் பெரும் எண்ணிக்கையில் இஸ்லாத்திற்கோ, கிறிஸ்தவத்திற்கோ மதம் மாறிவிடுவார்களோ என்றஞ்சிய சாவர்க்கர், 1930இல் ஒரு கருத்தை வெளியிட்டார்: மஹர்களிடையே மதமாற்றம் நிகழுமானால் அதனை 95% மஹர்கள் எதிர்ப்பர், ஏனெனில் மஹர்களின் மதமாற்றத்தால் அவர்களுக்குத் தீட்டுப்பட்டுவிடும். அவர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளும் சாதிப் பஞ்சாயத்து தீட்டுப்பட்டுவிடும், இவ்வாறு மதமாற்றம் செய்துகொள்பவர்கள் தம் சாதியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு சாதி அடையாளத்தை இழந்தவர்களாகிவிடுவர். எனவே மஹர்களின் உண்மையான முன்னேற்றம் அவர்கள் தம் சாதியைக் காப்பாற்றி வைத்துக்கொள்வதன் மூலமே சாத்தியப்படும். அதாவது, மஹர்கள் என்றென்றும் மஹர்களாக, தீண்டப்படாதவர்களாகவே இருக்க வேண்டும் என்பதுதான் சாவர்க்கர் கூற்றின் சாரம்.

கோபால் குரு மேலும் கூறுகிறார்: இந்தியாவிலுள்ள 30,000த்துக்கும் மேற்பட்ட சாதிகளை ‘ஒழித்துக்கட்டிவிட்டு’ அவர்கள் எல்லோருக்குமான பொதுவான இந்து அடையாளத்தைக் கொடுப்பதற்கு சாவர்க்கர் வகுத்த திட்டம் பின்வரும் அம்சங்களைக் கொண்டிருந்தது:

1. கோவில்களை அனைத்து இந்துக்களுக்கும் உரியவையாக்குதல்.

2. அனைத்து இந்துக்களும் சேர்ந்து விருந்துண்ணுதல்.

3. கலப்புத் திருமணங்கள் செய்வித்தல்.

4. சாதியடிப்படையில் தொழில்கள் செய்வதற்குத் தடை விதித்தல்.

5. கடற்பயணத்துக்கான தடையை நீக்குதல். (இதில் கடைசியாகச் சொல்லப்பட்டது பார்ப்பனர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏனெனில் கடல் கடந்து பயணம் செய்வது இந்து தர்மத்துக்கு விரோதமானது என்று ‘தர்ம சாத்திரங்கள்’ கருதுகின்றன. அதனால்தான் பெனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை நிறுவியவரும், காங்கிரஸ் தலைவர்களில் இருந்த அதேவேளை இந்து மகாசபையிலும் செயல்பட்டுவந்தவருமான பண்டித மதன் மோகன் மாளவியா இங்கிலாந்துக்குச் சென்ற போது, கடற்பயணம் மேற்கொண்ட பாவத்தைக் கழுவுவதற்காக ஒரு கூஜாவில் கங்கை நீரையும் கொஞ்சம் களிமண்னையும் எடுத்துச் சென்றார். (ஆகவே காலஞ்சென்ற குத்தூசி குருசாமி மாளவியாவை ‘மண்ணுருண்டை மாளவியா’ என்றே குறிப்பிடுவார்! – எஸ்.வி.ஆர்.)

மேற்சொன்ன ‘திட்டம்’ சாதிக் கட்டமைப்பை நீக்க உதவாது என்பதற்கான காரணங்களைக் கூறுகிறார் கோபால் குரு. கலப்புத் திருமணத்தை சாவர்க்கர் ஒரு பெரிய செயல் திட்டமாக, மிகப் பெரும் எண்ணிக்கையில் மக்களைத் திரட்டுவதற்கான ஓர் உணர்வுபூர்வமான நடவடிக்கையாகப் பார்க்கவில்லை. மாறாக, ‘போனால் போகிறது’ என்ற அளவிலேயே அவர் கலப்பு மணத்தை ஆதரித்தார்.

சூத்திரர்களுக்கும் தலித்துகளுக்கும் வேதங்களையும் வேத சடங்குகளையும் கற்பிக்கலாம், அவர்களும் வேதங்களில் சொல்லப்பட்டுள்ள சடங்குகளைச் செய்யலாம் என்று அவர் கூறியதன் உள்நோக்கம் அவர்களைப் பார்ப்பனத்தன்மை பெற்றவர்களாகவும் இந்து சாத்திரங்களை ஏற்றுக் கொள்பவர்களாகவும் ஆக்குவதுதான்.

**தடை செய்யப்படாத இந்துத்துவம் -நூல்**

ஆக, 1909இல் வெளிவந்த ‘இந்தியாவின் முதல் சுதந்திரப் போர், 1857’ நூலில் அவர் இந்து-முஸ்லிம் ஒற்றுமை என்று பேசியதெல்லாம் ஆங்கிலேயருக்கு எதிராக முஸ்லிம்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தின் காரணமாகவே என்பதும் அவரது உள்ளத்தின் அடியாழத்தில் புதைந்திருந்த முஸ்லிம்-வெறுப்பு, 1923இல் – அதாவது பிரிட்டிஷாரின் நிபந்தனைகளை ஏற்பட்டு செயல்படத் தொடங்கியபோது அப்பட்டமாக வெளிப்படத் தொடங்கியது என்பதும் தெளிவு.

‘இந்தியாவின் முதல் சுதந்திரப் போர், 1857’ நூலைத் தடை செய்த பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்திற்கு, ’இந்துத்துவா’ நூலைத் தடை செய்ய வேண்டிய தேவை இருக்கவில்லை. ஏனெனில் 1923 ஆம் ஆண்டிலிருந்து பிரிட்டிஷார் வெளியேறிய வரை காதுடைந்த ஊசியளவுக்குக்கூட அவர்களுக்குத் தொல்லை தரவில்லை. மாறாக, இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் ‘ரெக்ரூட்டிங் ஏஜெண்டாக’வும் இருந்தார். இந்துத்வா நூலில் ‘அந்நியர் படையெடுப்புகள்’ என்னும் பகுதியில் இந்தியாவில் பிரிட்டிஷார் படையெடுத்து, அதைத் தங்கள் சாம்ராஜ்யத்தில் இணைத்துக்கொண்டது பற்றி ஒரு வரிகூடக் காணப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சாவர்க்கரின் இந்துத்துவக் கோட்பாடு பின்னர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் உள்வாங்கப்பட்டு, ‘பண்பாட்டு தேசியம்’ என்ற கருத்தாக்கம் உருவாக்கப்பட்டது. ஒரு நாட்டின் பிரதேச அடிப்படையிலான தேசியம் என்பதற்கான மாற்றாக ‘பண்பாட்டு தேசியம்’ முன்வைக்கப்பட்டது. அந்தப் பண்பாட்டுத் தேசியத்துக்கான வரையறையை வழங்கினார் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாவது தலைவரும் அதன் தத்துவவாதியுமான கோல்வால்கர்.

“இங்கு ஏற்கெனவே முழுமையாக வளர்ச்சியடைந்திருந்த இந்து தேசம் இருந்தது. இந்த நாட்டில் வாழ்ந்துகொண்டிருந்த பல்வேறு சமூகங்கள், ஒன்று யூதர்களையும் பார்சிகளையும் போல விருந்தினர்களாகவோ, கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் போல படையெடுப்பாளர்களாகவோதான் இருந்தனர். இத்தகைய பலவகைப்பட்ட மக்கள், பொது எதிரியின் ஆட்சியின் கீழ், பொதுவான பிரதேசத்தில் தற்செயலாக வாழ்ந்த ஒரே காரணத்தினாலேயே தம்மை மண்ணின் குழந்தைகள் என்று எப்படி அழைத்துக் கொள்ள முடியும் என்ற கேள்வியை அவர்கள் ஒருபோதும் எதிர்கொள்ளவில்லை. …பிரதேச அடிப்படையிலான தேசியம் (பல மதத்தினரும் பகிர்ந்துகொள்ளப்படக்கூடிய இந்திய தேசியம் – எஸ்.வி.ஆர்.), எல்லோருக்கும் பொதுவான அபாயம் (பிரிட்டிஷ் ஆட்சி – எஸ்.வி.ஆர்.) என்ற கோட்பாடுகள் தேசம் பற்றிய நமது கருத்தாக்கத்துக்கு அடிப்படையாக அமைந்தன. இந்தக் கோட்பாடுகள் நமது இந்து தேச அடையாளத்தின் ஆக்கபூர்வமான உள்ளடக்கத்தன்மையை நாம் இழக்கும்படி செய்துவிட்டது”.

இந்து தேச அடையாளத்தின் ஆக்கபூர்வமான உள்ளடக்கத்தன்மையை மீட்டெடுக்கும் நோக்கத்துடனேயே அன்று முதல் இன்றுவரை சிறுபான்மையினரை இகழ்வதிலிருந்து தொடங்கி அவர்களை ‘ஒழித்துக்கட்டுவதற்கான’ பல்வேறு முயற்சிகளில் சங்பரிவாரம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு வருவது அனைவரும் அறிந்ததே.

**கட்டுரையாளர் குறிப்பு:**

கட்டுரையாளர் எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.

(கட்டுரை நாளை தொடரும்)

முந்தைய கட்டுரைகள்

[அமித் ஷாவின் வரலாறு எழுது நெறி!](https://minnambalam.com/k/2019/11/02/16/amitsha-about-history-svrajathurai-article-about-indian-history )

[இந்தியாவின் முதல் சுதந்திரப் போரும் (1857) சாவர்க்கரும்!](https://www.minnambalam.com/k/2019/11/03/14)

[‘வீர்’ சாவர்க்கர்](https://www.minnambalam.com/k/2019/11/04/13/veer-savarkar-history)

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *