பேனர்கள் வழக்கு: மாநகராட்சி நோட்டீஸுக்குத் தடை!

Published On:

| By Balaji

அனுமதி இன்றி டிஜிட்டல் பேனர்கள் அச்சடித்தால் ஓராண்டு சிறை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்ற மாநகராட்சியின் நோட்டீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (செப்டம்பர் 25) இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பேனரால் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து சட்டவிரோத பேனர்களுக்கு எதிராகச் சென்னை மாநகராட்சி கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது. செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை மாநகராட்சி, அச்சகங்களுக்கு அனுப்பிய நோட்டீஸில் சட்டவிரோதமாக பேனர்கள் அச்சடித்தால் ஓராண்டு சிறை அல்லது ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் டிஜிட்டல் பேனர் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் எஸ்.பஷீர் உயர் நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி அறிவிப்புக்கு எதிரான மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்,

அதில், “டிஜிட்டல் பேனர்களுக்கு உயர் நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. அதேபோல பிரின்டிங் பிரஸ் நிறுவனங்களுக்குச் சீல் வைக்க உத்தரவு பிறப்பிக்காதபோது, மாநகராட்சி இதுபோன்ற ஓர் அறிவிப்பை வெளியிட்டது தவறானது. டிஜிட்டல் பேனர்களை எங்கு வைக்க வேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்ய முடியாது. விதிமுறைகளை மீறி பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, டிஜிட்டல் பேனர் நிறுவனங்கள் மீது கோபத்தைக் காட்டக் கூடாது. சென்னை மாநகராட்சி நோட்டீஸுக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த மனு நேற்று (செப்டம்பர் 25) நீதிபதி சத்திய நாராயணன், சேஷசாயி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேனர்கள் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஞானதேசிகன், “யாருக்காக பேனர் அச்சடிக்கிறார்கள், எங்கு வைக்கிறார்கள் உள்ளிட்ட விவரங்கள் கேட்ட பிறகே பேனர் அடிப்பதற்கான ஆர்டர் பெறப்படும்” என்று தெரிவித்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள், பேனர்கள் அச்சடிப்பது குற்றமல்ல, சட்டவிரோதமாக வைப்பதுதான் குற்றம் என்று கருத்து தெரிவித்து மாநகராட்சி நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இம்மனுவுக்கு மாநகராட்சி பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை அடுத்த மாதம் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்,

முன்னதாக சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில், [அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை ஏன் இன்னும் கைது செய்யவில்லை](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/09/25/119/Why-not%20arrest-the-former-AIADMK-councilor-highcourt-in-subhasree-case) என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share