அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா இரண்டு இடங்களை அதிகரிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தைத் தான் அணுக வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதனிடையே மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால் கடலூரைச் சேர்ந்த மாணவிகள் தர்ஷினி மற்றும் இலக்கியா உள்ளிட்டோர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த மாணவிகள் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை முன் தேதியிட்டு அமல்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு கடந்த டிசம்பர் 11ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அரசுக் கல்லூரிகளில் கூடுதலாக இரண்டு மருத்துவ இடங்களை அதிகரிக்க முடியுமா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இந்த வழக்கு மீண்டும் நேற்று (டிசம்பர் 17) விசாரணைக்கு வந்தபோது, மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடம் உருவாக்கக் கூடாது என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், இவ்விவகாரம் குறித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தரப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்குத் தமிழகத்திலிருந்து வழங்கப்பட்ட 227 இடங்கள் மீண்டும் மாநில அரசுக்கே வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், மனுதாரர் உட்பட 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் கிடைக்கும் 26 இடங்கள் கொண்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள 60 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டது.
இதையடுத்து அந்த 60 பேரில் யாருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று தெளிவுபடுத்த உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 18ஆம் தேதிக்கு (இன்று) நீதிமன்றம் ஒத்திவைத்தது.
**-பிரியா**�,