nஉச்சத்தில் விலை: திருடப்படும் வெங்காயம்!

Published On:

| By Balaji

வெங்காய விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், குடோனில் வைக்கப்பட்டிருக்கும் வெங்காயமும், கடைகளில் விற்பனைக்காக வைக்கப்படும் வெங்காயமும் திருடப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

மழையின் காரணமாக வெங்காயம் அழுகுவதாலும், உற்பத்தி குறைவாலும் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது. கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை ரூ.80க்கும், பெரிய வெங்காயத்தின் விலை ரூ.64க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேட்டிலிருந்து வாங்கிச் செல்லும் கடை வியாபாரிகள் கோயம்பேட்டில் விற்கப்படுவதைக் காட்டிலும் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். அதன்படி ஒரு கிலோ வெங்காயம் ரூ.74 முதல் ரூ.80 வரையில் விற்பனையாகிறது.

இந்நிலையில் வெங்காயத்தைப் பதுக்கி வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. சில்லரை விற்பனையாளர்கள் 10 மெட்ரிக் டன்னும், மொத்த விற்பனையாளர்கள் 50 மெட்ரிக் டன்னும் வெங்காயத்தை இருப்பு வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வெங்காய விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் எகிப்து, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வெங்காயத்தின் விலை உச்சத்தைத் தொட்ட நிலையில், நாசிக்கில் குடோனில் வைக்கப்பட்டிருந்த ரூ.62,000 மதிப்பிலான வெங்காயம் திருடப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் நாசிக் அருகே, கல்வான் தாலுக்காவில் இருந்த குடோன் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த 40 மூட்டை வெங்காயம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த குடோன் உரிமையாளர் அபோனா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஞாயிற்று கிழமை மாலை குடோனை பூட்டிச் சென்ற அதன் உரிமையாளர் திங்கள் காலை 9 மணியளவில் குடோனை திறந்து பார்க்கும் போது வெங்காயம் திருடுபோனது தெரியவந்ததை அடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் கடையில் வைக்கப்பட்டிருந்த வெங்காய மூட்டையை இளைஞர்கள் திருடும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. விஜயவாடாவில் உள்ள மளிகைக் கடைக்கு வந்த மூன்று இளைஞர்களில் ஒருவர் கடைக்காரரிடம் பொருள் வாங்குவது போல பேச்சுக்கொடுக்க, மற்றொரு இளைஞர் அங்கிருந்த வெங்காய மூட்டையை லாவகமாகத் திருடி, ஸ்கூட்டியில் வைத்து எடுத்துச் செல்வது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share