கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் தேவையானது இந்த ஆண்டில் அபரிமிதமாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 139.14 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
உலக தங்க கவுன்சில் அமைப்பானது, இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் தேவை இந்த மூன்றாம் காலாண்டில் அதிகரித்து இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.
இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் தங்கத்தின் தேவையானது 139.14 டன். இது சென்ற ஆண்டு மூன்றாம் காலண்டின் தங்க தேவையிலிருந்து 47 சதவிகிதம் அதிகம். அதாவது, சென்ற காலாண்டில் வெறும் 81.18 டன் அளவுக்கு மட்டுமே தங்கத்தின் தேவை நம் நாட்டில் இருந்தது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 140.04 டன் அளவுக்கு தங்கத்தின் தேவை இருந்தது.
ஏறக்குறைய அந்த அளவுக்கான தங்கத்தின் தேவை இப்போது இருக்கிறது. 2022ஆம் ஆண்டு கொரோனா மூன்றாம் அலை வராதபட்சத்தில் தங்கத்தின் தேவை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2021ஆம் ஆண்டு முதல் ஒன்பது மாதம் வரை 730 டன் அளவுக்கான தங்கம் இந்திய சந்தைக்கு வந்திருக்கிறது. இதில் நகைகளுக்கான தேவை சுமார் 260 டன் ஆகும். சுமார் 160 டன் முதலீட்டு நோக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இதற்கான காரணம் குறித்து விசாரித்தோம். “இந்திய சமுதாயத்தில் பண்டைய காலம் தொட்டே தங்கம் இன்றியமையாததாக இருந்து வருகிறது. கல்யாணம், காது குத்து என எந்த ஒரு விழாக்களிலும் பண்டிகைகளிலும் தங்கம் அங்கம் வகிக்காமல் இருக்காது.
கொரோனா காலகட்டத்தில் உலக அளவில் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டதன் காரணமாக, மக்கள் தங்களுடைய பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினார்கள். இதனால் தங்கத்தின் விலை கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய அளவில் உயர்ந்தது.
கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவந்த நம் மக்கள், தங்கள் தேவைகளுக்காக இப்போது தங்கம் வாங்கி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் முதல் இந்தியாவில் பண்டிகைக் காலம் மற்றும் திருமணக் காலம் என்பதால், மக்கள் தொடர்ந்து நிறைய தங்க நகைகளை வாங்கி வருகின்றனர்” என்கின்றனர் தங்க உற்பத்தியாளர்கள்.
**-ராஜ்**
.�,