வேலைநிறுத்த போராட்டம் மூலம் நீதிமன்றத்துக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்று நினைப்பது தவறு எனச் சென்னை உயர் நீதிமன்றம் குடிநீர் உற்பத்தியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை புழலைச் சேர்ந்த சிவமுத்து என்பவர், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு பிப்ரவரி 27ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் செயல்படும் சட்டவிரோத குடிநீர் ஆலைகளை மூடி சீல் வைக்க வேண்டும். அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும்” என்று கூறி நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் வழக்கை மார்ச் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இன்று 6ஆவது நாளாகப் போராட்டம் தொடரும் நிலையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு இன்று (மார்ச் 3) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் இதுவரை 552 குடிநீர் ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது. கடந்த காலங்களில் சட்டவிரோதமாகச் செயல்பட்ட குடிநீர் ஆலைகள் அதற்கு உரிய விலை கொடுக்க வேண்டாமா? நிலத்தடியிலிருந்து நீரை எடுக்கும் அளவுக்கு ஏற்ப ஆலைகளிடம் இருந்து ஏன் கட்டணம் வசூலிக்கக்கூடாது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இயற்கை வளமான தண்ணீரை இலவசமாக எடுக்க அனுமதிப்பது ஆச்சரியமாக இருப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், மூடப்பட்ட ஆலைகளைத் தற்காலிகமாக இயங்க அனுமதிப்பது குறித்து நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர். அப்போது போராட்டத்தின் மூலம் நெருக்கடி கொடுக்கலாம் என்று நினைப்பது தவறு எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
**கவிபிரியா**�,”