உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிக்கே இதுதான் நிலையா?

Published On:

| By Balaji

உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றியவரே காவல் துறையினர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தாக்குதல் வழக்கு தொடர்பாக குற்றவாளிகளை காவல் துறை தப்பவிட்டதாக குற்றம்சாட்டி சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி காவல் நிலையம் முன்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆ. செல்வம் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 22) முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நீதிபதி செல்வம், “நான் 31 ஆண்டுகாலம் தமிழகத்தில் நீதிபதியாக பணியாற்றியுள்ளேன். அதில் 11 வருடங்கள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்துள்ளேன். என்னுடைய சொந்த ஊரைச் சுற்றிலும் பல்வேறு கோயில்கள் உள்ளன. உதவி ஆய்வாளராக இப்பகுதியில் சேதுராஜன் என்பவர் வந்த பிறகு கோயில்களில் மதுபாட்டில்கள்தான் கிடக்கின்றன. நான் பலமுறை அவரிடம் கூறியபோதிலும் எந்த பலனும் இல்லை” என்று குற்றம்சாட்டினார்.

அருகில் கையில் மாவுக்கட்டுடன் இருந்த ஒருவரைக் காட்டிய நீதிபதி செல்வம், “இந்த வழக்கை பொறுத்தவரை உதவி ஆய்வாளரிடம் பலமுறை கூறியும் அவர் குற்றவாளிகளை கைது செய்யவில்லை. பாதிக்கப்பட்டவர் எஸ்.பியிடம் அளித்த மனு என்ன ஆனதென்றே தெரியவில்லை. அதன்பிறகு மாவட்ட ஆட்சியரிடம் இதுபற்றி தொலைபேசியில் தகவல் தெரிவித்தேன். எஸ்.பிக்கு ஆட்சியர் குறுஞ்செய்தி அனுப்பினார். அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். அதன்பின்னர், மறுநாள் காலை உதவி ஆய்வாளர் திருப்பத்தூரிலுள்ள டிஎஸ்பியைச் சந்தித்துள்ளார். இது நடந்த உடனேயே குற்றவாளிகளை தப்பவிட்டுவிட்டுவிட்டனர்” என்று விமர்சித்தார்.

சம்பவம் நடந்து 20 நாட்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு சாட்சியையும் விசாரிக்கவில்லை. குற்றவாளியை கைது செய்யவில்லை. பிறகு எதற்கு இந்த காவல் துறை இருக்கிறது? மக்களின் நண்பர் என்று காவல் நிலையத்தில் எழுதிப்போட்டுவிட்டு மக்களுக்கு எதிரியாகத்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றும் நீதிபதி குற்றம்சாட்டியுள்ளார்.

குற்ற வழக்கில் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்வமே காவல் நிலையம் முன்பு போராட்டம் செய்ய வேண்டிய நிலையில் தான் தமிழக காவல்துறை உள்ளது எனில் சாதாரண மக்களின் நிலை என்ன என்று கேள்வி எழுப்புகிறார்கள் பொதுமக்கள்.

உயர் நீதிமன்றத்தில் கடந்த 11 ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றி 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஓய்வுபெற்றார். ஓய்வு பெற்றவுடன், தனக்கு அரசு சார்பில் அளிக்கப்பட்ட பிரிவு உபச்சார விழாவைப் புறக்கணித்தவர் செல்வம். அதுபோலவே அரசு வழங்கி இருந்த இல்லத்தையும், காரையும் திருப்பி அளித்துவிட்டார். ஓய்வுக் காலத்திற்குப் பின்னர் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள தனது சொந்த ஊரான பூலாங்குறிச்சிக்குச் சென்று விவசாயம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

*எழில்*

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share