எஸ்.வி.ராஜதுரை
கடந்த ஏப்ரல் – மே மாதங்களில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக கூட்டணி எதிர்பார்த்த இடங்களைக் காட்டிலும் கூடுதலான இடங்களைப் பெற்று, தேர்தல் முடிவுகளுக்கும் இந்தியாவில் ஏற்பட்டுவரும் பணமதிப்புக் குறைப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றால் லட்சக்கணக்கான மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் ஆகியவற்றுக்கும் மறுபுறம் இந்த இன்னல்களைத் தோற்றுவித்த அரசாங்கத்தின் கொள்கைகள், நடைமுறைகள் ஆகியவற்றுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக 2014ஆம் ஆண்டில் மோடி அளித்த வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை என்றபோதிலும், 2019 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி தொடர்பாக அவர் வெளியிட்ட முதல் அறிக்கை, அந்தத் தேர்தல் ‘மதச்சார்பின்மை’யின் மரணத்தையும், இந்தியாவில் ஏழைகள், பணக்காரர்கள் என்ற இரண்டே சாதிகளைத் தவிர மற்ற எல்லா சாதிகளும் ஒழிந்துவிட்டன என்பதையும் அறிவித்துவிட்டதாகக் கூறியது.
**காங்கிரசின் சிதைவு**
சாதிகளின் கூட்டணிகளை மிக சாதுரியமாக உருவாக்குவதிலும், பண, பதவி ஆசைகளைக் காட்டி எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களை விலைக்கு வாங்குவதிலும், லஞ்சம் ஊழல் புகார்களில் சிக்கியுள்ள மாநில அரசியல் கட்சித் தலைவர்களையும் அமைச்சர்களையும் ‘பிளாக் மெயில்’ செய்தும், இந்துக் கலாச்சாரம் என்ற பெயரால் தலித்துகளை ஒடுக்கியும் மிரட்டியும், பதவியாசை பிடித்த தலித் தலைவர்கள் பலரை வளைத்துப்போட்டும், தேர்தல் நிதி திரட்டுதல் தொடர்பான சட்டத்திட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்து, கார்ப்பரேட் நிறுவனங்கள் அளித்த பல லட்சம் கோடி ரூபாய்களைச் செலவிட்டும், ஊடகங்களையும் சமூக வலைதளங்களையும் மிகத் திறம்படப் பயன்படுத்தியும் மட்டும் இந்த வெற்றி பெறப்படவில்லை.
லஞ்ச ஊழல் கறைபடிந்த, நாட்டின் நலனைவிடத் தங்கள் கட்சியின் நலனே முக்கியம் என்று கருதிய எதிர்க்கட்சிகளின் பலஹீனங்களையும் – குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் சிதைவையும் – இடதுசாரிகளுக்கு இருந்த செல்வாக்கு சரிந்தமையும் பாஜவுக்குச் சாதகமாக அமைந்தன. ஆனால், பாஜகவின் 2019ஆம் ஆண்டு வெற்றிக்கான மிக முக்கியமான காரணமாக இருந்த ஒன்றையும் நாம் காண வேண்டும்.
**தேர்தல்களும் தாக்குதல்களும்**
வட, மத்திய இந்தியாவிலுள்ள பெரும்பான்மையான இந்து மக்களின் இந்துமதப் பற்றைத் தூண்டிவிட்டதும், தேசப்பாதுகாப்பு என்ற பெயரில் அந்த மக்களிடையே முஸ்லிம் விரோத மனப்பான்மையை ஊக்குவித்ததும், அந்த மாபெரும் வெற்றியைச் சாதித்தது. காஷ்மீரிலுள்ள இந்தியப் பாதுகாப்புப் படையினரின் மீது பாகிஸ்தானின் ’தாக்குதல்’ நடந்ததும், பாகிஸ்தானுக்கு பாலக்கோட்டில் ‘பதிலடி’ கொடுத்ததும் தேர்தலுக்குச் சில நாட்களே இருக்கும்போது நடந்ததும், மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலச் சட்டமன்றங்களுக்கான தேர்தல் நடப்பதற்கு ஒரு நாளுக்கு முன் ஏறத்தாழ இதே போன்ற தாக்குதலும் பதிலடியும் நடத்தப்பட்டதும் எதிர்பாராத நிகழ்ச்சிகள்தானா என்ற கேள்வியை எழுப்புகின்றன.
எப்படியிருந்தாலும், இந்தியாவிலுள்ள மத்தியதர – நகர்ப்புற வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமின்றி, கிராமப்புறத்தில் சாதாரண விவசாயிகளாக உள்ள இந்து மக்களும்கூட தங்களுக்கு நேர்ந்த பொருளாதார இன்னல்களைவிட மத, சாதிப் பற்றையும் அதன் அடிப்படையில் அமைந்த ‘தேசியப்பற்றை’யுமே பெரிதாகக் கருதுகிறார்கள் என்றே புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. இல்லாவிடில், கடன் தொல்லைகளால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கையை இந்தியாவிலேயே அதிகம் கொண்டுள்ளதாகக் கருதப்படும் மகாராஷ்டிராவின் கிராமப்புற மக்கள் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மிக உற்சாகமாக வாக்களித்ததை எப்படிப் புரிந்து கொள்வது?
**அரசியலும் பொருளாதாரமும்**
இந்திய அரசியலில் பொருளாதாரப் பிரச்சினை தவிர, மொழி, பண்பாடு, பிரதேச உணர்வு, மதம், சாதி ஆகியனவும் எப்போதுமே இடம்பெற்று வந்திருக்கின்றன என்றாலும் பொருளாதாரப் பிரச்சினை அரசியல் பிரச்சினையிலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டிருக்கவில்லை. பாபர் மசூதி இடிப்புக்குப் பின் இந்துத்துவ சக்திகள் வேகமாக வளர்ச்சியடைந்து 1998இல் முதன் முதலாக பாஜக மத்திய அரசாங்க அதிகாரத்துக்கு வந்தபோதும்கூட பொருளாதாரப் பிரச்சினை, அரசியல் பிரச்சினையோடு சேர்ந்தே வந்தது.
2004ஆம் ஆண்டில் பாஜக கூட்டணி தோல்வியுற்றதற்கான முக்கியக் காரணமாக இருந்தது வாஜ்பாய் கூறிவந்த ‘ஒளிரும் இந்தியா’ பொருளாதார ரீதியில் ஒளிமங்கிப் போனதுதான்.
2014ஆம் ஆண்டுத் தேர்தலில் மோடியை முன்னிறுத்தி பாஜகவால் செய்யப்பட்ட கருத்துப் பரப்புரை, பொருளாதாரப் பிரச்சினைகளை முதன்மைப்படுத்தியது அம்பானி, அதானி, வேதாந்தா வகையறாக்களைக் கொழுக்க வைத்தது மட்டுமே அதன் ஒரே பொருளாதார சாதனை. ‘மேக் இன் இந்தியா’, ‘ஒரு கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு’ என்பனவெல்லாம் மோடியின் வாய்ப்பந்தல் மட்டுமே என்பது நிரூபணமாயிற்று.
பணமதிப்புக் குறைவும் ஜிஎஸ்டியும் சேர்ந்து பொதுமக்களுக்கு ஏற்படுத்திய பாதிப்புகள் தொடர்ந்து நீடிக்கின்றன. அப்படியிருந்தும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதுடன் மட்டுமின்றி மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலச் சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றிப் பயணத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது பாஜக. இந்தச் சட்டமன்றத் தேர்தலின்போதும்கூட மோடியோ, அமித்ஷாவோ, பிற பாஜக தலைவர்களோ நாட்டைக் கவ்வியிருக்கும் பொருளாதாரச் சரிவைப் பற்றிப் பேசவில்லை. மதம், தேசப்பாதுகாப்பு ஆகியனவே அதன் பரப்புரை நிகழ்ச்சி நிரல்களில் இடம் பெற்றிருந்தன.
ஹரியானாவில் மோடி கையில் எடுத்துக்கொண்ட ஒரே ஒரு பொருளாதார அம்சம் ஹரியானா விவசாயிகளின் சாகுபடிக்கான தண்ணீர்ப் பிரச்சினைதான். அதையும்கூட அவர் பாகிஸ்தான் விரோத, தேசியவாதச் சொல்லாடலாகவே மாற்றினார்.
“ஹரியானா மாநில விவசாயிகளுக்குத் தண்ணீர் இல்லாதபோது, இனி பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு நீர்கூடக் கொடுக்க மாட்டேன்” என்று சூளுரைத்தார் – இது நடக்கக்கூடிய காரியம் அல்ல என்றாலும்.
**பாஜகவின் சாதனை**
ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட ஸ்வராஜ் இந்தியா கட்சியின் தலைவரும் சமூகவியல் அறிஞருமான யோகிந்தர் யாதவ், இந்தியாவில் அரசியலிலிருந்து பொருளாதாரத்தை முற்றிலுமாகப் பிரித்தெடுத்தது பாஜகதான் என்று கூறுகிறார். வலுவான சான்றுகளுடன் அவர் ஹரியானாவின் பொருளாதார நிலைமையை எடுத்துக் கூறியுள்ளார்:
1. மக்கள்தொகை அதிகமாக உள்ள பஞ்சாப், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, ஜார்கண்ட் ஆகியவற்றை ஒப்பிடுகையில் இந்தியாவின் சிறிய மாநிலங்களிலொன்றான ஹரியானாவில்தான் வேலையின்மை விகிதம் அதிகமாக உள்ளது. அதாவது 20 லட்சம் பேர் வேலையின்றித் தவிக்கின்றனர். ஆனால், இவர்களில் பெரும்பாலோர் ஓரளவு படிப்புள்ளவர்கள், அந்தப் படிப்பின் காரணமாக, எந்த வேலையானாலும் சரி, எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லக்கூடியவர்கள் அல்ல மாறாக, தங்கள் கல்வித் தகுதிக்கு மீறிய வேலைகளை எதிர்பார்க்கின்ற, ஆனால் அவை கிடைக்கப் பெறாதவர்கள்.
2. விவசாயத்தில் டிராக்டர்கள் போன்ற இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவது அதிகமாகிக் கொண்டே போவதால், ஆண்டுதோறும் கிராமப்புற உழைப்பாளர்களில் 2% கிராமங்களிலிருந்து விவசாயத் துறையிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.
3. இந்தியாவில் மோட்டார் வாகன உற்பத்தியில் ஹரியானா முக்கிய இடம் வகித்து வந்தது. ஆனால், அண்மையில் அந்தத் துறையில் ஏற்பட்டுள்ள சரிவின் காரணமாக நல்ல ஊதிய விகிதம் வழங்கப்படும் நிரந்தரத் தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். வெளிமாநிலங்களைச் சேர்ந்த தற்காலிகத் தொழிலாளர்களுக்கும் இதே கதி ஏற்பட்டு வருவதால், அந்த மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.
4. ஹரியானாவில் இருப்பதைப் போன்ற நிர்வாகத் திறன் மிகவும் குறைந்த, அசமந்தமான, அக்கறையற்ற அரசாங்கத்தை எங்கும் காணமுடியாது
5. அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான சமுதாயக் கொள்கையின் காரணமாக, உள்ளாட்சி அமைப்புகளில் தலித்துகளுக்கும் பெண்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் இல்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிடக் கல்வித் தகுதி என்ற ஒன்றை அந்த அரசாங்கம் உருவாக்கியுள்ளது. அந்தக் கல்வித் தகுதி இல்லாதவர்கள் தேர்தலில் நிற்க முடியாது. அரசாங்கப் பதவிகளுக்குக் கல்வித் தகுதி தேவைப்படலாம். ஆனால், பாமர மக்கள் தங்கள் தேவைகளையும் குறைகளையும் எடுத்துச் சொல்வதற்கான அரங்கங்களான உள்ளாட்சி மன்றங்களில் கல்வித் தகுதியைக் கோருவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றாலும், ஹரியானா அரசாங்கத்தின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் தந்துள்ளது.
இந்தப் பிரச்சினைகள் எதைப் பற்றியும் பாஜக தேர்தல் பரப்புரைகள் பேசவில்லை என்றாலும் ஹரியானாவில் அதன் வெற்றி ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது.
நாட்டின் பொருளாதார நிலைமை எவ்வளவு சீர்கெட்டாலும் சரி, அரசியலில் பாஜக வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் நிலை இன்னும் பல ஆண்டுகள் நீடிக்கும். இதை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப் பற்றிய சிந்தனையை, பாஜகவுக்கு மாற்றாக காங்கிரஸ் அல்லாத வேறு ஓர் இயக்கத்தை (கட்சியை அல்ல) உருவாக்குவது சகிப்புத்தன்மையுள்ள, சமத்துவம் பேணுகின்ற இந்தியாவைக் காண விரும்புபவர்களின் முன் உள்ள சவால்.
**கட்டுரையாளர் குறிப்பு**
கட்டுரையாளர் எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.�,”