இன்னும் எத்தனை நாட்கள் காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தொடரும் என்று மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் இன்று (அக்டோபர் 24) கேள்வி எழுப்பியுள்ளது.
காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தும், மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இதையடுத்து ராணுவ கட்டுப்பாட்டுக்குள் காஷ்மீர் கொண்டுவரப்பட்டது. மொபைல் மற்றும் இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டன. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இதற்கிடையில், தொலைத்தொடர்பு துண்டிப்பு மற்றும் ஊடக சுதந்திரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (அக்டோபர் 24) நீதிபதி ரமணா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காஷ்மீரில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு 2 மாதங்கள் ஆகின்றன. இன்னும் எத்தனை நாட்கள் அங்குக் கட்டுப்பாடுகள் நீடிக்கும்?. இது குறித்துத் தெளிவுபடுத்த வேண்டும்” என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதற்கு மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா காஷ்மீரில், வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்த ஒரு சில இடங்களைத் தவிர 99 சதவிகித இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. பள்ளத்தாக்கில் உள்ள கட்டுப்பாடுகள் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்படுகின்றன என்று வாதிட்டார்.
இதை ஏற்ற நீதிபதி சுபாஷ் ரெட்டி, தேச நலன் கருதி சில கட்டுப்பாடுகள் விதிப்பது அவசியம் என்றாலும் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து வழக்கை நவம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.�,