கல்லூரிகளுக்கு 12 நாள் விடுமுறை: மாணவர் போராட்டத்தை தடுப்பதற்கா?

Published On:

| By Balaji

தமிழகத்தில் நாளை முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு விடுமுறை அளித்து உயர்க்கல்வித் துறை அறிவித்திருக்கிறது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் கல்லூரி மாணவர்களும், பல்வேறு கட்சியினரும் போராடி வருகிறார்கள். மாணவர்களின் போராட்டம் கட்சி சார்பற்ற முறையில் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் வரும் 23ஆம் தேதி திமுக சார்பில் சென்னையில் பேரணி நடைபெறவிருக்கிறது. இந்தப் பேரணிக்கு அரசியல் கட்சிகள், விவசாயிகள், மாணவர்கள், நடிகர்கள் என அனைத்து தரப்பினரும் வருகைத் தர வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்து வருகிறார்.

இந்த சூழலில் கல்லூரிகளுக்கு நாளை முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் (டிசம்பர் 21,22) சனி- ஞாயிறு, வரும் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ், 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் ஜனவரி 1ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு என்பதாலும் விடுமுறை என்பதை தாண்டி வேலை நாட்களான 23,24,26,31 ஆகிய தேதிகளிலும் விடுமுறை அளித்துள்ளது உயர் கல்வித் துறை. மீண்டும் ஜனவரி 2ஆம் தேதிதான் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் செயல்படத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை நாட்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தி அதனை ஈடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் முதன்மை செயலாளர் மங்கத் ராம் சர்மா, இன்று (டிசம்பர் 20) தமிழக கல்லூரி கல்வி இயக்குநர், தொழில்நுட்ப கல்வி இயக்குநர் மற்றும் அனைத்துப் பல்கலைக் கழகப் பதிவாளர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் இந்த விடுமுறை தொடர்பாக அறிவுறுத்தியிருக்கிறார்.

குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவான போராட்டக் களங்களுக்கு திட்டம் தீட்டப்படும் இடமாக கல்லூரிகளும், கல்லூரி ஹாஸ்டல்களும் இருப்பதால்தான் 12 நாள் விடுமுறை விட்டு ஹாஸ்டல்களை இழுத்து மூடி வருகிறது அரசு. ஹாஸ்டல்களை மூடிவிடுவதன் மூலம் போராட்டங்களில் மாணவர் பங்கேற்பைக் குறைக்கலாம் என்பதே அரசின் திட்டம் என்கிறார்கள் மாணவர்கள்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share