புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க உத்தரவு!

Published On:

| By Balaji

புலம்பெயர் தொழிலாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகம் உட்பட வெளிமாநிலங்களுக்கு வேலைக்குச் சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் அந்த அந்த மாநிலங்களிலேயே சிக்கிக் கொண்டனர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் சங்லி மாவட்டத்தில் உள்ள குப்வாட் கிராமத்தில் சிக்கியுள்ள கணேசன் உட்பட 400க்கும் மேற்பட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்களை மீட்கக் கோரி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்குத் தேவையான ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட வசதிகளைச் செய்து கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே சமயத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அதுகுறித்து நீதிமன்ற கவனத்துக்கு கொண்டு வர வேண்டும் என்று மனுதாரருக்கு அறிவுறுத்தியது.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அமர்வில் நேற்று (ஜூலை 10) விசாரணைக்கு வந்த போது, வழக்கறிஞர் சூரிய பிரகாசம், ”லட்சக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படவில்லை. மேற்கு வங்கத்தில் ரேஷன் அட்டை இல்லாவிட்டாலும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு இலவச உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், கோவை மாவட்டம் துடியலூரில் புலம் பெயர் தொழிலாளியின் கர்ப்பிணி மனைவியை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால், அவர் ஆட்டோவில் பிரசவித்ததாகவும், இதனால் குழந்தைக்குக் காயம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, ரேஷன் அட்டை இல்லாவிட்டாலும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புலம் பெயர் தொழிலாளர்கள் என்பதற்காக அவர்களுக்கு மருத்துவ வசதி மறுக்க முடியாது என்றும் கோவை சம்பவம் துரதிருஷ்டவசமானது என்றும் வேதனை தெரிவித்த நீதிபதிகள் புலம் பெயர் தொழிலாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, செங்கல் சூளையில் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக வைக்கப்பட்ட விவகாரத்தில் அதன் உரிமையாளர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அரசிடம் கேட்டுத் தெரிவிப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிபதிகளிடம் தெரிவித்துள்ளார்.

இதை ஏற்ற நீதிபதிகள் வழக்கை ஜூலை 13ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share