நவீன காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி மதுவுக்கு அடிமையாகியுள்ளனர். மது அருந்துபவர்கள் தங்களுக்குத் தானே தீங்கு ஏற்படுத்திக் கொள்வதைக் காட்டிலும் அடுத்தவர்களுக்குத் தொந்தரவு கொடுப்பதையே அதிகமாக வைத்துள்ளனர். மதுவால் 2.6 லட்ச இந்தியர்கள் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் இந்தியாவில் சில மாநிலங்கள் மதுவுக்குத் தடைவிதித்துள்ளன. இதில் பிகார், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களும் அடங்கும். தடையை மீறி மது விற்பனை அல்லது அருந்தினால் கடுமையான அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதிலும் குஜராத் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் தடையையும் மீறி மது அருந்தினால் விநோதமான தண்டனை அளிக்கப்படுகிறது.
பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள கட்டிசிட்டாரா பழங்குடி கிராமத்தில் மதுவுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி ஒருவர் குடிபோதையில் பிடிபட்டால், ரூ,2000 அபராதத்துடன் ரூ.20,000க்கு அந்த கிராமத்துக்கே மட்டன் கறி விருந்து வைக்கவேண்டும் என்று தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குடிபோதையால் இந்த கிராமத்தில் தாக்குதல்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த அபராத முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
அக்கிராமத்தைச் சேர்ந்த சர்பஞ்ச் கிம்ஜி துங்கைசா கூறுகையில், ”ஒருவர் குடிபோதையில் பிடிபட்டால் ரூ.2000 அபராதம் செலுத்த வேண்டும், அவர் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டிருந்தால் ரூ.5000 செலுத்த வேண்டும். அதோடு இந்த கிராமத்தில் உள்ள 800 பேருக்கும் மட்டன் கறி கொண்டு விருந்தளிக்க வேண்டும்.
கிராமத்தில் குடிகாரர்களால் உருவாக்கப்பட்ட தொல்லைகளைக் குறைக்க இந்த தண்டனை உதவியது. ஆரம்ப ஆண்டுகளில் சராசரியாக மூன்று முதல் நான்கு பேர் பிடிபட்டனர். 2018 ஆம் ஆண்டில் ஒருவர் மட்டுமே பிடிபட்டார். 2019 ஆம் ஆண்டில் இந்த கிராமத்தில் ஒருவர் கூட பிடிபடவில்லை” என்றார்.
�,