பதினெட்டாம் நூற்றாண்டின் ஈர சரித்திரம்!
உலக சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய உன்னத வரலாறு பதினெட்டாம் நூற்றாண்டை ஆண்ட சிவகங்கை மகாராணி வேலு நாச்சியாரின் வீர வரலாறு.
16 தேசங்களைக் காலனியாதிக்கமாகக் கட்டியாண்ட பிரித்தானியப் பேரரசு தோல்வி முகம் கண்டு வெளிறிப் போனது சிவகங்கை வரலாற்றில் மட்டும்தான். மேலும், தோல்வியடையச் செய்தவர் ஒரு பெண்மணி என்பதால் அந்தப் பேரவமானத்தை வரலாற்றில் இருந்து துடைத்துவிடத் துடித்தார்கள் வெள்ளையர்கள்.
தமிழர்கள் ஒற்றுமையாக நின்ற அந்த அற்புத வரலாற்றை அடியோடு மறைத்துவிடத் துடித்தார்கள் கிழக்கிந்தியக் கம்பெனிக் கொள்ளையர்கள். அன்று அவர்கள் அரசியல் ரீதியாக வலுத்திருந்த காரணத்தால் வரலாற்றைத் திரித்து எழுதியது முதல் பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்து போனார்கள்.
கடந்த 2004ஆம் ஆண்டு முதல் வேலு நாச்சியார் வரலாற்றை நுணுக்கமாக ஆய்ந்துவருகிறேன். சிவகங்கை வீர வரலாற்றை நாட்டிய நாடகமாக எழுதி இயக்கி உலகெங்கும் நிகழ்த்திவருகிறேன். தற்போது வேலு நாச்சியார் உண்மை வரலாறு குறித்த மும்மொழிப் புத்தகத்தை எழுதி முடித்து தமிழ் – ஆங்கிலம் – ஃபிரெஞ்சு ஆகிய மொழிகளில் வெளியிடவிருக்கிறேன். திரைப்படமாக்கும் வேலையிலும் ஈடுபட்டிருக்கிறேன்.
இந்த நிலையில்தான், சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறைப் பேராசான் மரியாதைக்குரிய திரு.கோபாலன் இரவீந்திரன் அவர்கள் என்னிடம்,
“வேலு நாச்சியார் வரலாற்றை முழுவதுமாக இல்லாவிட்டாலும் குயிலியின் வரலாற்றை மட்டுமாவது எளியவர்களின் கலையான தெருக்கூத்து வடிவத்தில் எழுதுங்களேன்…” என்று திரிமுனை கிள்ளி உணர்வலையை எழுப்பி விட்டார்.
தெருக்கூத்து என்பது தமிழர்களின் ஆதிக் கலை வடிவங்களில் ஒன்று. ஓர் எழுத்தாளனாகத் தெருக்கூத்து வடிவத்தையும் முயன்று பார்த்துவிட வேண்டும் என்னும் பேராவல் என்னுள் எழுந்தது.
அதன் பின், இரு வார காலம் அதே முனைப்பாக இருந்தேன். நூற்றாண்டுகள் கடந்த தெருக்கூத்து இலக்கிய நூல்கள் பலவற்றைப் படித்து அதன் பாரம்பரிய வடிவத்தை அறிந்துகொண்டேன்.
சிவகங்கை வரலாற்றின் சகல கோணங்களும் பதினைந்து ஆண்டுகளாக என்னுள் ஆழ ஊறியிருப்பது என்பதால் “வீரத் தளபதி குயிலி” என்னும் தெருக்கூத்து நாடகப் படைப்பினை ஒரே இரவில் அமர்ந்து எளிய வடிவில் எழுதி முடித்தேன்.
சிவகங்கை வரலாற்றின் ஒவ்வொரு பாத்திரமும் தனித்துவமானது. தமிழ் மண்ணைத் தலைநிமிர்த்த வல்லது.
ஈடு இணையற்ற மகாராணி வேலு நாச்சியார், வீர மதியூகி தாண்டவராயன் பிள்ளை, மாவீர மாமன்னர்கள் மருது சகோதரர்கள், காட்டிக் கொடுக்க மறுத்து உயிர் நீத்த விசுவாசி உடையாள், ஆபத்தில் உதவிய ஹைதர் அலி, அடைக்கலம் கொடுத்துக் காத்த கோபால நாயக்கர் என மொத்தக் கதாமாந்தர்களும் சித்தம் நெகிழச் செய்பவர்கள்.
அந்த வரிசையில் சிவகங்கை மீட்புப் போரின் முக்கியத் திருப்பமாகத் திகழ்கிறார் குயிலி. மண் பாசமும், விசுவாசமும், வீரமும், தியாக வேட்கையும் குயிலியோடு குழைந்து கொந்தளிக்கின்றன.
அன்று சிவகங்கை மக்களைக் கொடுங்கோல் செய்துகொண்டிருந்த பிரித்தானிய பேரரசிடம் ஆயுதங்கள் அதிகமதிகம் இருந்தன. அவர்களை எதிர்த்தடிப்பது என்பது குட்டி ஆடு ஒன்று குன்றை மோதுவது போல என்பதை உணர்ந்த வேலு நாச்சியார் தகத்தகாய திட்டம் ஒன்றை வகுக்கிறார்.
வெள்ளையர்களின் ஆயுதக் கிடங்கை அழித்துவிட முனைகிறார்.
போர்த் தந்திரங்களில் முக்கியமானது போரெடுக்கு முன் எதிரிகளின் ஆயுதங்களை அழித்து விடல். அதன் மூலம் தன் தரப்பில் உயிரிழப்பு நேராத வண்ணம் காத்தல். இந்த அபார திட்டத்துக்கு அம்பு முனையாக வந்து நின்றவர்தான் குயிலி. நவராத்திரி நாளில் எரியும் தீபங்களின் நெய்யை எல்லாம் தன் மேனியில் சரித்துக்கொண்டு வெற்றி வேல் – வீர வேல் என
முழங்கியபடியே ஆயுதக் கிடங்குக்குள் குதித்தாள் குயிலி. ஆயுதங்கள் வெடித்துச் சிதறின. வெள்ளையர் திகைத்தனர்.
அதன் பின் நடந்ததெல்லாம் நெக்குருக வைக்கும் வரலாறு.
வேலு நாச்சியாரின் வீரத் தளபதியாம் குயிலியை தலித் இனத்தின் வரலாற்றுப் பிரதிநிதியாக காண்பதைவிட, இந்திய உப கண்டத்தின் பெரும் போராளியாக வழிமொழிவதே நமக்குப் பெருமை சேர்க்கும்.
பதினெட்டாம் நூற்றாண்டின் சாதனையாளர்களுக்கு இருந்த ஒரே நோக்கம் விடுதலை. வீர சுதந்திரம். பதினாறு பாளையக்காரர்களும் தங்களிடையே இருந்த சிறு சிறு பேதங்களையெல்லாம் மறந்து ஓரணியில் திரண்ட உன்னதத் தருணம்தான் சிவகங்கை மீட்புப் போர். அதனால்தான் உலக வரலாற்றில் இழந்த மண்ணை மீட்டெடுத்துக்கொண்ட ஒரே வரலாறாக சிவகங்கை வெற்றி வரலாறு இன்றும் ஜொலிக்கிறது.
அந்த ஏக சிந்தனையை இனியும் வளரவிடக் கூடாது. இந்திய மண்ணின் சமூக ஒற்றுமையைத் தூள் தூளாக்கிவிட வேண்டும் என முனைந்த அந்நியர்கள் 1780 முதல் 1801 வரை ஓயாமல் உள்கலகம் செய்து போனார்கள். அதன் மிச்ச வீச்சம் இன்றும் வீசுகிறது என்பதை வைத்தே அன்றைய அந்நிய சதி மூளையின் வீரியம் எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. அந்த அந்நிய சதியை வேரறுத்து சமூக நீதியை – ஏக சிந்தனையை மீண்டும் நிலைநிறுத்துவது பதினெட்டாம் நூற்றாண்டுக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகும்.
வீரத் தளபதி குயிலி என்னும் தெருக்கூத்து நாடகத்தைப் புகழ்பெற்ற தெருக்கூத்துக் கலைஞர்களான கமலக்கண்ணன் ஐயா மற்றும் ரூபன் அவர்களின் சீரிய பயிற்சியில் திருவள்ளூர் பொன்னியம்மன் தெருக்கூத்து நாடகக் குழுவினர் அரங்கேற்றுகின்றனர்.
அரங்கேறப் போகும் இடம் இந்தியாவின் தாய்ப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான சென்னைப் பல்கலைக்கழகம். முன்னெடுப்பது அதன் இதழியல் துறை. எண்ணமும் வண்ணமுமாக வழி நடத்துபவர் இதழியல் துறைத் தலைவர் பேராசான் திரு.கோபாலன் இரவீந்திரன் அவர்கள். அவரால் தோற்றுவிக்கப்பட்டதே “முற்றம்.” ஊடகம் மற்றும் சமூக விழிப்புணர்வு கருத்தாக்கங்களை நிகழ்த்துக் கலையின் வாயிலாக பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே பரப்புரை செய்யும் களமாகச் செயல்பட்டுவருகிறது முற்றம். அதன் 10ஆம் ஆண்டு விழா 21.12.2018 அன்று நிகழவிருக்கிறது.
அதன் சிறப்பு நிகழ்வாகத்தான் அரங்கேறப் போகிறது பதினெட்டாம் நூற்றாண்டின்
வீரத்தியாகியாம் குயிலியின் சரித்திரம். சமூக நீதியை – சாதி மத பேதமற்ற நல்லிணக்கத்தை ஓங்கிப் பறை சாற்றியதே சிவகங்கை மீட்புப் போர். அதுவே அதன் தனிச் சிறப்பு. தமிழ் மண்ணின் தியாக வரலாற்றை தெருக்கூத்து வடிவில் கடத்த வாய்ப்பமைந்தது என் பிறவிப் பேறு.
அனைவரையும் பணிந்து வரவேற்கிறார் வீரத் தளபதி குயிலி!