சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 13ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி கடந்த சில தினங்களாக பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், நாமக்கல், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதியானது, தமிழகத்தின் வளி மண்டல மேல் அடுக்கில் நிலவுகிறது. இதன் காரணமாகக் கோவை, நீலகிரி, தர்மபுரி, திண்டுக்கல் ,கிருஷ்ணகிரி, ஈரோடு, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
**-கவிபிரியா**�,”