கனமழை காரணமாக இன்று சென்னை உள்பட இருபதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தீபவாளிக்குப் பிறகு பெய்த இரு பெரும் கனமழை சென்னையையும், அதன் மக்களையும் புரட்டிப்போட்டது. இந்த நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று சென்னையில் கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும், இன்று பெய்யும் மழை என்ன செய்யுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்குத் திசையில் நகர்ந்து இன்று (நவம்பர் 18) தெற்கு ஆந்திரா – வட தமிழ்நாடு கடற்கரை நோக்கி நகர உள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரிப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் அதிக கனமழையின் காரணமாக தண்ணீர் தேக்கம் இருக்கும்பட்சத்தில் முன்னெச்சரிக்கையாக குடிநீர், பால், உணவு காய்கறிகளை இரண்டு நாட்களுக்கு தேவையான அளவுக்கு வாங்கி இருப்பு வைத்து கொள்ள வேண்டும். நீர்நிலைகள், கால்வாய்கள் மழைநீர் தேங்கி இருக்கும் இடத்தில் மக்கள் செல்ஃபி எடுப்பதை தவிர்க்க வேண்டும். தெருவிளக்கு மின்கம்பங்கள், மின் இணைப்பு பெட்டிகளை தொடுதல் மற்றும் மரங்களின் கீழ் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.மழை தொடர்பான உதவிக்கு 94454 77205, 94450 25819, 94450 25820, 94450 25821 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.மேலும் மழைதொடர்பான புகார் மற்றும் நிவாரண உதவிக்கு 1913 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், ,கள்ளக்குறிச்சி, நாகை, விழுப்புரம், தேனி, மயிலாடுதுறை, தஞ்சை, தூத்துக்குடி,பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் விடுமுறை அறிவித்துள்ளது. திருநெல்வேலி, சேலம், கடலூர், அரியலூர், திருவாரூர்,திருச்சி,கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று மதியம் முதல் மழை பெய்யத் தொடங்கியது. இரவில் சில இடங்களில் கனமழையும் பெய்தது. சென்னையில் காலை 8 மணிக்கு மேல் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
**-வினிதா**
�,