Jகனமழை தொடரும்: வானிலை மையம்!

Published On:

| By Balaji

கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 5.5 கிலோ மீட்டர் உயரத்தில் வளிமண்டல மேல் அடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாகவும் கீழ் அடுக்கில் கிழக்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாகவும் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

முன்னதாக விழுப்புரம் , கடலூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்ததால் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்திருப்பதைக் காணமுடிகிறது. கடலூரில் பிப்ரவரி மாதத்தில் 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பதிவாகி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கோட்டக்குப்பம், கூனிமேடு, பிள்ளைச்சாவடி, கந்தாடு உள்ளிட்ட பகுதிகளில் இரவு தொடங்கி விடிய விடியக் கனமழை பெய்துள்ளது.

கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் புதுச்சேரியில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் கடலூர், புதுச்சேரி. விழுப்புரத்தில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

**-பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share