சென்னையில் கொட்டித் தீர்த்த மழை: ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழை!

Published On:

| By Balaji

சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பெய்த கனமழையால் மாநகர் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. இந்த நிலையில் இன்று ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று மாலை வரை ஆங்காங்கே கனமழை பெய்தது. சென்னையில் கோயம்பேடு, அண்ணா சாலை, பல்லாவரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், பட்டினப்பாக்கம், அடையாறு, திருவான்மியூர், மந்தைவெளி, தியாகராயநகர், ஆதம்பாக்கம், வேளச்சேரி உட்பட பல இடங்களில் இடைவிடாமல் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். வாகனத்தை இயக்க முடியாமல் முழங்கால் அளவு மழை நீரில் தள்ளிச்சென்ற காட்சியையும் காண முடிந்தது. தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்த சுரங்கப் பாதைகள் நீரில் மூழ்கின. சில குடியிருப்பு பகுதிகளில் தரை தளத்தில் குளம் போல் மழை நீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் பலரும் வீடுகளுக்குள் முடங்கினர்.

மழையின் காரணமாக, செம்பரம்பாக்கம், புழல் மற்றும் பூண்டி ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்தது. எனவே பாதுகாப்பு கருதி செம்பரம்பாக்கம் அணையில் இருந்து விநாடிக்கு 3,000 கனஅடி நீரும், புழல் ஏரியிலிருந்து 1,500 கனஅடி நீரும், பூண்டி ஏரியிலிருந்து 2,970 கனஅடி நீரும் நேற்று திறந்து விடப்பட்டது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள், சென்னை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வடசென்னை, மதுராந்தகம், இந்துஸ்தான் பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ, தரமணி, கேளம்பாக்கம், கொளப்பாக்கம், அண்ணா பல்கலைக்கழகம், திண்டிவனம், சென்னை விமானநிலையம் ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீ, தாம்பரம் 4 செ.மீ மழையும் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

**-பிரியா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share